அநுரவின் கட்சி ரணில் அரசுக்கு ஆதரவு வழங்கும்! – ஐ.தே.க. நம்பிக்கை.

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் இந்திய விஜயம் வரவேற்கத்தக்கது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். அத்துடன் அநுரகுமாரவின் கட்சி, தற்போதைய ரணில் அரசுடன் இணைந்து செயற்படும் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“தேசிய மக்கள் சக்தி, உலகத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவது நல்ல விடயமாகும்.
நாட்டின் கொள்கைகளை உருவாக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி தமது பங்களிப்பை வழங்கும்.
இது புதிய விடயம் ஒன்றல்ல. கடந்த காலத்திலும் தேசிய மக்கள் சக்தியான ஜே.வி.பி. மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அரசுடன் இணைந்து பணியாற்றியுள்ளது.
2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசுக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கியுள்ளது.
அந்தவகையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுக்கும் ஜே.வி.பியின் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கும்.” – என்றார்.
இதேவேளை, இந்தியாவுக்கான விஜயம் மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அங்கு பல தரப்பினரையும் சந்தித்ததுடன் பல நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பிலும் ஈடுபட்டனர்.