அரசியல் நோக்கத்துக்காகவே ’13’ ஐ பயன்படுத்திக் குழப்பம் விளைவிப்பு : டக்ளஸ்
“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஒவ்வொருவரும் தங்களது அரசியல் தேவைகளுக்காக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.”
– இவ்வாறு குற்றஞ்சாட்டினார் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
குறித்த விடயத்தில் அரசு இதுவரை எந்தவிதமான தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மாகாண சபை முறைமையானது எமக்குக் கிடைத்திருந்த காலந்தொட்டு அதனை எமது மக்கள் நலன் சார்ந்து செயற்படுத்தியிருந்தால், இன்று எமது மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்தவரையில் தீர்க்கப்பட்டிருக்கும் என்பதை நான் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றேன்.
எனினும், குறித்த அதிகாரத்தைப் பெற்றவர்களும், அபகரித்துக் கொண்டவர்களும் அதனை ஒழுங்குற செயற்படுத்தியிருக்கவில்லை.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவரினது தன்னிச்சையான போக்கானது கடந்த காலங்களில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பில் மக்கள் மத்தியில் ஒரு கேள்வியைத் தோற்றுவித்திருந்தது.
மக்களது ஆணையை மதித்து இந்த அரசால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில் குறைபாடுகள் அல்லது சேர்க்கைகள் இருப்பின் அது குறித்து ஆராய்ந்து அவற்றைச் சரி செய்து கொள்வதற்கு கால அவகாசம் இருக்கின்றது என்பதால், இது குறித்து எவரும் வீண் குழப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை” – என்றார்.