“ஹெரொயின் ஹீரோக்கள்” – சிக்மலிங்கம் றெஜினோல்ட்

ஒரு காலம் பெடியள் இயக்கத்துக்குப் போகிற செய்திகளே ஊருக்குள் அமர்க்களமாக இருக்கும். “அந்த ரியூட்டரியிலிருந்து எட்டுப் பேர் போயிட்டாங்களாம்”. “இந்தப் பள்ளிக்கூடப் பெடியள் ஆறுபேர் கிளம்பீட்டாங்களாம்”. “அந்த வாசிகசாலையிருந்து அஞ்சுபேர் வெளிக்கிட்டிட்டான்களாம்…. நாலடியிலயிருந்து ஏழு பேராம். மாதாகோயிலடியிலயிருந்து நாலுபேர் போட்டாங்களாம்…”

இப்படித் தினமும் போராடப்போகின்றவர்களைப் பற்றி, தங்களைத் தேசத்துக்காகவும் சமூகத்துக்காகவும் இனவிடுதலைக்காகவும் அர்பணித்துப் புறப்படுகின்றவர்களைப் பற்றிய செய்திகளாலேயே அன்றைய நாட்கள் விடிந்தன. அந்தப் பொழுதுகள் நிறைந்திருந்தன.

மட்டுமல்ல, ஊரில் நடக்கும் நல்லது கெட்டதுகள் அத்தனையிலும் முன்னின்று செயற்படுவது பெடியளே. வாசிகசாலைச் சிரமதானமாக இருந்தாலென்ன? கோயிலில் சாமி காவுகிறதாக இருந்தாலென்ன? குளமோ வாய்க்காலே தூர் வாருகிறதாக இருந்தாலென்ன? எல்லாவற்றுக்கும் ஓடி முன்னுக்கு வந்து நிற்பது பெடியளே.

இதெல்லாம் ஏதோ பல நூற்றாண்டுகளுக்கு முன்னே நடந்த சங்கதிகளல்ல. எங்களுடைய இந்த மண்ணில், ஒரு பத்துப் பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சங்கதிகள். அதுவும் உங்களுடைய வீடுகளிலும் உங்களுடைய குடும்பத்திலும் உங்களுடைய அயலிலும் நடந்தவை. இன்னும் இந்தச் சம்பவங்கள் உங்களில் பலருடைய மனதில் அழியாத நிழலாக ஆடிக்கொண்டிருக்கும். அல்லது உங்களுடைய பிள்ளைகளுக்கோ இளைய சகோதரர்களுக்கோ இந்தக் கதைகளை நீங்கள் பல தடவை சொல்லியிருக்கவும் கூடும். அந்தளவுக்கு மறக்க முடியாத கதைகள்.

“எப்படித்தான் அந்தக் கதைகளையெல்லாம் மறக்க முடியும்?” என்று இந்தக்கணத்திலும் உங்கள் நெஞ்சு நெடுமூச்செறியலாம்..

அந்தளவுக்கு அன்றைய இளைய தலைமுறை சமூகப் பற்றோடும் இனப்பற்றோடும் இருந்தது. பொதுப்பணிகளில் ஆர்வம் கொண்டுழைத்தது. அப்படி அவர்களை வழிப்படுத்துவதற்கு அன்று தலைவர்கள் இருந்தனர். இயக்கங்கள் இருந்தன. வழிகாட்டிகள் இருந்தனர். ஊரிலும் வெளியிலும் நல்ல மனிதர்கள் இருந்தார்கள். Roll Model என்று சொல்லக்கூடியதாகவும் Ambition னாக ஏற்றுக் கொள்ளவும் தக்க பெரியவர்கள் இருந்தனர். பொதுவாழ்வுக்காகத் தங்களைத் தியாகம் செய்து கொண்ட முன்னோடிகள் பலர் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். இதெல்லாம் இளைய தலைமுறை தன்னுடைய காலடிகளை முன்னே வைத்து நடப்பதற்கான பாதையைத் தந்தது. துணிவைத்தந்தது. நம்பிக்கையை ஏற்படுத்தியது.

எனவேதான் அது ஒரு பொற்காலமாக விரிந்தது.

இன்றோ… இதெல்லாம் தலைகீழாகி விட்டன.

“…… கேணியடியில் இரவு வாள் வெட்டு. ஆவா குழுவின் அட்டகாசம்”

“வீடு புகுந்து நள்ளிரவில் இனந்தெரியாத இளைஞர்கள் தாக்குதல்”.

“தனியே இந்த மூதாட்டியின் நகைகளையும் காசையும் இளைஞர் குழுவொன்று பறித்துச் சென்றது”

“….. க்குப் பக்கத்தில் கோஸ்டி மோதல். இரண்டு அணியைச் சேர்ந்தவர்களுக்கும் கடுமையான காயங்கள். பொலிசார் தேடுதல்”

இப்படியான சேதிகளால்தான் இன்றைய பொழுதை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

அல்லது “டிப்பர் மோதி இரண்டுபேர் பலி”

“வேகத்தினால் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதியது வான். சாரதி உள்பட நான்குபேர் படுகாயம்”

“விரைவைக் கடுப்படுத்த முடியாத நிலையில் மின்கம்பத்தில் மோதி இளைஞர் பலி”

“மதுபோதையில் இளைஞர்கள் கை கலப்பு” என்று வரும் சேதிகள் நம்மைச் சுற்றி வளைத்துக் கவலைப்படுத்துகின்றன.

இது ஏன்? இந்த நிலை எப்படி ஏற்பட்டது? இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன? பின்னணி என்ன? இதற்கும் இனப்பிரச்சினைக்கும் அதன் தொடர்ச்சியாகப் படையினருக்கும் அரசுக்கும் தொடர்புகளிருக்குமா?

ஒரு கொஞ்சக் காலம் அப்படியான சேதிகள் ஊர்களில் உலாவியதும் உண்டு. படைத்தரப்பினால் பெடியள் சீரழிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு மது வழங்கப்படுகிறது. பணம் கொடுக்கப்படுகிறது. மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள் என்றெல்லாம். குறிப்பாகப் புலனாய்வாளர்களால் என்று.

அப்படியென்றால், இதற்கு யார் பொறுப்பு?

எங்களுடைய பிள்ளைகளை எப்படிப் பிறர் சுலபமாகத் தங்களுக்கு இசைவாகக் கையாள முடிகிறது? அதுவும் பிறத்தியார்? எங்களுடைய மாணவர்கள் எப்படி பிறருடைய சொல்லுக்கு எடுபடுகிறார்கள்? எங்களுடைய தலைமைத்துவத்தைக் கடந்து எப்படி பிறர் மனம் நோக்குகிறார்கள்? இவர்களை ஆற்றுப்படுத்தவும் வழிப்படுத்தவும் நம்மிடம் ஆட்களில்லையா? ஆற்றல் இல்லையா? இன்றைய நம்முடைய இளைய தலைமுறையைக் கவரக்கூடிய முன்னோடிகளும் தலைவர்களும் Roll Models களும் Ambitions களும் இல்லாமல் போனதா? அல்லது அரசியல் அடிமைகளைப் போலச் சுய சிந்தனையில்லாமல் காசுக்கும் மதுவுக்கும் அரச உத்தியோகத்துக்குமாக இளைய தலைமுறை அலைகின்ற அளவுக்குத்தான் உள்ளதா?

ஆம், அப்படியானதொரு நிலைதான் இன்றுள்ளது. என்பதால்தான் “கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் போதைப்பொருட்களோடு கைது செய்யப்பட்டுள்ளனர்” என்ற செய்தியை தலைப்பில் எங்களுடைய பத்திரிகைகள் வெளியிடும் நிலை வந்திருக்கிறது. இதைக் கண்டு கடந்த வாரம் கலங்கியவர்கள் பலர். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்துக் கடைசியில் நம்மையே கடிக்கும் நிலை வந்து விட்டதா? என்று. இப்படி மாணவர்களையே பீடித்திருக்கும் இந்தப் பிணிக்கு மருந்தென்ன? இதை எப்படிக் கட்டுப்படுத்துவது? என்று ஆளாளுக்குத் தலையைப் போட்டுப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சேதியைக் கண்டு ஆடிப்போய் விட்டனர் கல்வித் துறையினர். பெற்றோர். பொலிஸ் தரப்பினர். சமூகம் மீதான அக்கறையுடையோர் எல்லாம்.

இதை எப்படிக் கட்டுப்படுத்தலாம்? மாணவ சமூகத்தை எப்படிப் பாதுகாக்கலாம்? என்பதே இன்று எழுந்திருக்கும் மிகப் பெரிய கேள்வி.

ஆனால், இந்தப் போதைப் பொருட்பாவனை என்பது ஏற்கனவே சமூகத்தில் பல மட்டத்தினரையும் ஊடுருவித் தாக்குதல் நடத்தி இன்று விரிந்து பரந்துள்ள ஒரு சமூக நோயாகி விட்டது. பல வகையான போதைப் பொருட்கள் சமூகத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பழக்கத்துக்குப் பலரும் அடிமைகளாகியுள்ளனர். இளைய தலைமுறை அதிகமாக இருந்தாலும் ஏனைய பிரிவினரும் இதில் அடக்கம். படித்தவர்கள், அதிகாரிகள், முதியோர், குடும்பத்தலைவர்கள்….. என. குறிப்பாகச் சாரதிகள். இரவு நெடுந்தூர வாகன ஓட்டம் செய்வோரில் சிலர் ஐஸ் என்றொரு வகையான போதைப்பொருளைப் பயன்படுத்துகின்றனர். டிப்பர் சாரதிகளில் சிலருக்கும் இந்தப் பழக்கம் உண்டென்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஐஸ் ஒரு பொல்லாத சமான். அடித்தால் மூன்று நாட்களுக்குத் தூக்கமே வராதாம்.

அண்மையில் கிளிநொச்சி சிந்தனைக் களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவனைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி கலந்து கொண்டு போதைப்பொருட்பாவனை, அதன் விளைவுகள், அதைக் கட்டுப்படுத்தக்கூடிய வழிமுறைகளைப் பற்றி விளக்கமளித்தார். அவருடைய தகவல்களின்படி ஒவ்வொருவரும் தமக்கேற்ற மாதிரி ஒவ்வொரு வகையான போதைப்பொருட்களுக்குப் பழக்கமாகியுள்ளனர். இதற்கு அடிமையாகியவர்கள் முதலில் தன்னிலை இழக்கிறார்கள். இதனால் களவு, கொலை வரை இவர்களைக் கொண்டு செல்கிறது. இவர்களால் குடும்பத்தில் அமைதி இழக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் இவர்களுடைய உடல் பாதிக்கப்படுகிறது. நரம்புகள் செயலிழந்து விடுகின்றன. இப்போது பலர் சிறைச்சாலைகளில் கூட உள்ளனர். இப்படியானவர்களுக்கு முறையான புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும். இதற்கு நிச்சயமாக வடக்கில் ஒரு புனர்வாழ்வு நிலையைத்தை நாம் உருவாக்க வேண்டும். அப்படி ஒரு புனர்வாழ்வு நிலையத்தை உருவாக்கினால்தான் இவர்களை அங்கே தனிமைப்படுத்திப் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்து முடியும். இல்லையென்றால் சமூகத்தில் கலந்திருந்து தொடர்ந்தும் இவர்கள் தீய வழிகளிலேயே செயற்படுவர் .இவர்களைக் கட்டுப்படுத்தவே முடியாதிருக்கும். அத்துடன், இவர்களைக் குணமடைவதற்கு இந்த வலைப்பின்னலில் உள்ளவர்கள் விடவும் மாட்டார்கள். இந்த வலைப்பின்னலை நீங்கள் நினைப்பதைப்போல சுலபமாகப் பிடித்து விட முடியாது. அந்தளவுக்குப் பாதுகாப்பும் அபாயமும் நிறைந்தது. ஆளை ஆள் தெரியாத ஒரு பொறிமுறையில் இதை இவர்கள் செய்கிறார்கள் என்று பொலிஸ் தரப்பு சொல்கிறது. ஆகவே இதைக் கட்டுப்படுத்துவதற்கு நாம் அனைவரும் ஒவ்வொரு வழியிலும் முயற்சிக்க வேண்டும். இதில் இன்னொரு முக்கியமான விசயம், போதைப்பழக்கத்துக்குள்ளாகிய இவர்களுடைய குடும்பத்தினருடைய உளவியல் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும். குடும்பத்தில் உள்ள ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றால் அதனால் முழுக்குடும்பத்தின் மகிழ்ச்சியும் அமைதியும் கெட்டிருக்கும். ஆகவே அவர்களை அதிலிருந்து மீட்டு இயல்பு நிலைக்குக் கொண்டு வரவேண்டும். இப்படி இது மிகமிகக் கவனமாகக் கையாள வேண்டிய ஒரு அவசியமான பணி…..” என அவர் சொன்னார்.

இதைக் கேட்கும்போது நமக்கே தலையைச் சுற்றுகிறது.

அவர் மேலும் சொன்ன பல தகவல்கள் மிகக் கவலையளிப்பன. சிறைச்சாலைகளில் (குறிப்பாக யாழ்ப்பாணத்திலேயே) பலர் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகிச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் ஒவ்வொருவருடைய கதைகளும் மிகச் சோகம் ததும்பியவை. ஆனால், பரிதாபரமானவை. இவர்களைக் கோவித்து ஆகப்போவதொன்றுமில்லை. நமக்கு முன்னுள்ள சவால் இவர்களை இந்தப் பழக்கத்திலிருந்து மீட்டெடுப்பது. ஏனையவர்களை இந்தப் பழக்கத்திற்குட்படாமல் தவிர்ப்பது.

ஆனால், இதொன்றும் எளிய விசயமல்ல. ஏனென்றால் தினமும் கேரளக் கஞ்சா எங்களுடைய கடற்கரைகளில் வந்து இறங்கிய வண்ணமே உள்ளது. படையினரும் அதைப் பிடிக்கிறார்கள். இருந்தாலும் பொருள் வரத்துக் குறையிற மாதிரித் தெரியவில்லையே. பொலிசிலும் படையினராலும் பிடிபடுகிற, கைப்பற்றப் படுகிற பொருட்களை விட அதிகமான பொருட்கள் எப்படியே உள்ளுருக்குள் போய் விடுகிறது என்பதே நம்முடைய அனுமானம். இல்லையென்றால் இந்தளவுக்கு போதைப்பொருட் பாவனையும் அதற்கு அடிமையானோரும் பெருகக் காரணம் என்ன? எப்படி இது நிகழ முடியும்?

இன்று (30.08.2020) இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது வந்திருக்கும் செய்தி தலையே கலக்குகிறது. இலங்கை முழுவதிலும் ஏறக்குறைய 25 லட்சம் பேர் போதைப்பொருள் பாவனை, விநியோகம் போன்றவற்றோடு தொடர்பு பட்டிருக்கிறார்கள். இதில் கொழும்பில் மட்டும் ஐந்து லட்சம் பேர் வரையில் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படியென்றால் பாதாள உலகம் ஆழமாக விரிந்து பரவித்தான் உள்ளது. இந்தத் தொகை என்பது நாட்டின் சனத்தொகை விகிதாசாரத்தில் ஏறக்குறைய ஆறு ஏழு வீதமாகும்.

முன்பெல்லாம் கடற்கரையில் வண்டி நிற்குது என்றால், ஒன்றில் பயிற்சிக்காகப் போராளிகள் இந்தியாவுக்குச் செல்லப்போகிறார்கள் என்பதாக இருக்கும். அல்லது தமிழகத்திலிருந்து ஆயுதமும் மருந்துப் பொருட்களும் போராளிகளும் கரைக்கு வருவதாக இருக்கும்.

இப்போது?

கேரளக்கஞ்சா அல்லது ஹெரோயின் பொதிகளோடு வரும் வண்டிகளே எங்களின் கடற்கரையை நிறைக்கின்றன.

எனவேதான் இது ஒரு சீரழிந்த காலமாக விரிந்துள்ளது என்கிறேன். இதற்குக் காரணம், நாடும் சமூகமும் இன்று சிரழிவாளர்களின் கைகளில் வீழ்ந்திருப்பதேயாகும். நடந்து முடிந்த தேர்தல் ஒன்றே போதும் இதற்கு சாட்சியாக. அதிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் தேர்தலின்போது நடந்த கூத்துகள் அருவருக்கத் தக்கன. போற்றுதற்குரிய விடுதலைப்போராட்டம் ஒன்று நடந்த மண்ணில்தானா இதெல்லாம் நடக்கின்றன? இப்படியெல்லாம் நடக்கின்றன என்ற அளவுக்குப் பெரும் சீரழிவு. யாரையும் ஆட்கொள்ளத் தக்க மதிக்கத் தக்க தலைமையும் பேராளுமைகளும் இல்லாத வெற்றிடத்தில் நிற்கிறோம், துக்கம் தோய்ந்த தலைகளைத் தொங்கப்போட்டுக்கொண்டு.

ஹெரொயின் ஹீரோக்கள் ஆட்சி நடத்துகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.