குடியிருக்காத வீடுகளை பறிக்க வடக்கு ஆளுநர் நடவடிக்கை

அரச ஊழியர்களுக்கு ஓமந்தையில் வழங்கப்பட்ட காணிகளில் வீடுகள் அமைத்து அங்கு குடியிருக்கோதோரின் காணிகளை இரத்து செய்து அதனை காணி வீடு இல்லாதோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின் போதே இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றிய காணியற்ற 600ற்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு 2009ஆம் ஆண்டு ஓமந்தைப்பகுதியில் காணி வழங்கப்பட்டு குடியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அவற்றில் 131 வீடுகள் யாருமற்ற நிலையில் வெறுமையாக உள்ளது என வீடமைப்பு அதிகார சபை அதிகாரியினால் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது, யாரும் வசிக்காது வெறுமையாக உள்ள வீடுகளின் உரிமையாளர்களது காணி உரிமைப் பத்திரத்தினை இரத்து செய்து அதனை வீடு காணி அற்றோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்