தடைகளை முறியடித்து சரித்திரம் படைப்போம்! – சிறீதரன் சூளுரை.
“இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராக எந்தச் சூழ்ச்சிகள், தடைகள் வந்தாலும் மக்களின் ஆத்ம பலத்துடன் அதனை முறியடித்து சரித்திரம் படைப்போம்.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகவும், கட்சியின் புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்த பொதுக் குழுக் கூட்டங்களின் முடிவுகளுக்கு எதிராகவும் யாழ்ப்பாணம், திருகோணமலை மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து நேற்று இடைக்காலத் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த இடைக்காலத் தடை உத்தரவுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கட்சியின் தலைவர் சிறீதரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எந்த வழக்கையும் எதிர்கொள்ள நாம் தயார். எமக்கு எதிரான சூழ்ச்சிகள், தடைகளை நாம் மக்களின் ஆத்ம பலத்துடன் முறியடிப்போம்.
என்னையும் எனது கட்சியையும் குழப்பும், அச்சுறுத்தும் வகையில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றைக் கண்டு நாம் அஞ்சப் போவதில்லை.
என்னைத் தமது தலைவராக ஏற்றுக்கொண்ட கட்சியையும் எமது மக்களையும் இப்படியான சூழ்ச்சிகளால் முடக்க முடியாது. எத்தனை வழக்குகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம். நீதி நிச்சயம் வெல்லும்.” – என்றார்.