போதை பொருள் விவகாரம்: தீபிகா படுகோனே உள்பட 4 நடிகைகளுக்கு சம்மன்

போதைப்பொருள் வழக்கு: ரகுல் ப்ரீத், தீபிகா படுகோன் விசாரணைக்கு ஆஜராக என்சிபி உத்தரவு

பாலிவுட் திரைப்பட உலகில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக விசாரித்து வரும் தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை, திரைப்பட நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ராதா கபூர், ரகுல் ப்ரீத் சிங், திரை நட்சத்திரங்களுக்கான ஃபேஷன் ஆடை வடிமைப்பாளர் சைமோன் கம்பட்டா உள்ளிட்டோர் நாளை மறுதினம் (செப்டம்பர் 25) ஆஜராக புதன்கிழமை சம்மன் அனுப்பியிருக்கிறது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தை இந்திய புலனாய்வுத்துறையான சிபிஐ விசாரித்து வருகிறது. அவருக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்ததாக அவரது காதலி ரியா சக்ரவர்த்தி விசாரணையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பாலிவுட் பிரபலங்களுக்கு போதைப்பொருள் கிடைப்பது எப்படி என்பது குறித்த விசாரணையை தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை தனியாக விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே நடிகை ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரரும் சுஷாந்த் சிங் நண்பருமான ஷோவிக் சக்ரவர்த்தி, சுஷாந்த் தங்கியிருந்த வீட்டின் மேலாளர் சாமுவேல் மிராண்டா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், போதைப்பொருள் புழக்கம் தொடர்பான விசாரணைக்கு வருமாறு தீபிகா படுகோனின் மேலாளர் கரிஷ்மா பிரகாஷ், குவான் டேலன்ட் மேமேன்மென்ட் ஏஜென்சியின் தலைமை செயல் அதிகாரி துருவ் சிட்கோபேகர் ஆகியோரை தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை இரு தினங்களுக்கு முன்பு அழைத்திருந்தது.

தீபிகா

இதில் உடல் நலக்குறைவால் நேரில் ஆஜராக கரிஷ்மா பிரகாஷ் அவகாசம் கோரியிருப்பதாக அந்தத்துறை உயரதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தனர். துருவ் நடத்தி வரும் நிறுவனத்தில்தான் கரிஷ்மா பிரகாஷ் பணியாற்றி வருகிறார். அதன் அங்கமாகவே அவர் தீபிகாவுக்காக வேலை செய்து வருகிறார்.

தங்களின் விசாரணையின்போது அதிகாரிகள் இடைமறித்த வாட்ஸ் அப் தகவலில் நடிகை தீபிகா படுகோனின் மேலாளருக்கும் “டி” எனப்படும் நபருக்கும் இடையே நடந்த தகவல் பரிமாற்றத்தில், தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டதாக தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

இதன் அடிப்படையிலேயே அந்த வலைபின்னலில் தொடர்புடையவர்களாக கருதப்படும் சந்தேகம் அடிப்படையில் திரைப்பிரபலங்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ரகுல் ப்ரீத் சிங் வழக்கு

இதற்கிடையே, பாலிவுட் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், சாரா அலிகான், சைமன் உள்ளிட்டோர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக காவல்துறை விசாரணையில் ரியா சக்ரவர்த்தி தெரிவித்ததாக சில ஊடகங்களில் தகவல் வெளியானதை அடுத்து, தமது பெயருக்கு களங்கம் கற்பிக்கப்படுவதாகக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஊடகங்களின் செயல்பாடுகளுக்கு எதிராக ரகுல் ப்ரீத் சிங் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி நவீன் சாவ்லா, இதுபோன்ற விவகாரங்களில் ஊடகங்கள் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். புலனாய்வாளர்களுக்கு தெரியும் முன்பே ஊடகங்கள் எல்லாம் தெரிந்தது போல செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். ரகுல் ப்ரீத் சிங்கின் மனுவுக்கு இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை, பிரசார் பாரதி, இந்திய பத்திரிகை கவுன்ஸில் ஆகியவை பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

தமிழ் திரைப்படத்துறையில் 2012இல் தடையறத்தாக்க என்ற படத்தில் துணை நடிகையாக நடித்த ரகுல் ப்ரீத் சிங், 2013இல் வெளிவந்த புத்தகம் என்ற படத்தில் நாயகியாக நடித்தார். பிறகு என்னமோ ஏதோ, 2018இல் தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.