மனித – மிருக மோதலை தடுக்க வலியுறுத்தி வயநாட்டில் முழு அடைப்பு போராட்டம்
யானை தாக்கி உயிரிழந்த வனத்துறை தற்காலிக ஊழியரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.
வயநாடு மாவட்டத்தில் உள்ள புல்பள்ளியில், வனத்துறையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த வி.பி.பால் என்பவர் யானை தாக்கியதில் உயிரிழந்தார். கடந்த 10 நாட்களில் இது இரண்டாது உயிரிழப்பு என்பதால், பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், வயநாடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புலி மற்றும் யானை தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், புல்பள்ளியில் வனத்துறை தற்காலிக ஊழியர் பால், யானை தாக்கி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரணம் கோரி உடலை வாங்க மறுத்து போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டு, காவல் துறையினர் தடியடி நடத்தும் நிலை ஏற்பட்டது. பின்னர், உயிரிழந்தவரின் மனைவிக்கு தற்காலிக வேலையும், அவரின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக கேரள அரசு அறிவித்தது. அத்துடன், குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமும் அறிவித்தது. இதையடுத்தது உடலை பெற்றுக்கொண்டு போராட்டம் கைவிடப்பட்டது.
இருந்த போதும், மனித – மிருக மோதலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி வயநாடு மாவட்டத்தில் இன்று முழு அடைப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்தன. இதன் காரணமாக புல்பள்ளியில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, பாரத ஒற்றுமை நீதி யாத்திரையில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு நாடாளுமன்ற தொகுதி எம்.பி.-யுமான ராகுல் காந்தி, அவசரமாக வாரணாசியில் இருந்து வயநாடு சென்றார். பின்னர், உயிரிழந்த வி.பி.பால் வீட்டிற்கு நேரில் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அங்கிருந்து திரும்பிய ராகுல் காந்தி, உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் இருந்து தனது பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை தொடர உள்ளார்.
மேலதிக செய்திகள்
நவல்னியின் மரணத்திற்கு புடின் தான் காரணம் – பிடன் கூறுகிறார்.
மாலைதீவின் வெளிநாட்டு கடன் நெருக்கடி குறித்து ஐஎம்எஃப் எச்சரித்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் 354 மில்லியன் டாலர் செலுத்த நீதிமன்றம் உத்தரவு.