சுகாதார அமைச்சருக்கும் , தொழிற்சங்கங்களுக்குமான கலந்துரையாடல் வெற்றிபெறவில்லை என்றால் மீண்டும் வேலை நிறுத்தம்!
கடந்த சில நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கும் இடையில் இன்று (19) முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
அதன்படி இன்று காலை 10.00 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவ சேவைகள், பொது சுகாதார பரிசோதகர்கள், செவிலியர்கள் உட்பட சுகாதார துறையில் உள்ள பல தொழிற்சங்கங்கள், வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன், இந்த கோரிக்கைகளின் அடிப்படையில் பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி சுகாதார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த கிடைத்த , எழுத்துமூலமான வாக்குறுதியின் அடிப்படையில் கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி நடத்தப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர்.
குறித்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளதுடன், வெற்றிகரமான தீர்வு கிடைக்காவிடின் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.