மீகொட பெண் ஊழியரை சுட்டு, கொள்ளையடித்த சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
கடந்த 12ஆம் திகதி மீகொட பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த விற்பனை நிலைய பெண் ஊழியர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு , பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று கோடீஸ்வர வர்த்தகர்கள் உட்பட 5 பேரை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த ஹோமாகம பதில் நீதவான் மிஸ் பிரியங்கா மத்துமபடபேடி இன்று (18) அனுமதி வழங்கியுள்ளார்.
சந்தேகநபர்களான நிஹால் விஜேசிங்க, திலான் சஞ்சீவ தென்னகோன், செனரத் ஆராச்சிகே சிசர குமார, இராணுவத்தில் இருந்து தப்பியோடிய திமுத்து நிரோஷன் மற்றும் வாகன சாரதி சுஜித் குமார ஆகிய 5 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மோட்டார் சைக்கிளை மறைத்து வைத்திருந்த கடவத்த கிரில்லவர பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரும், துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கும், துப்பாக்கிச் சூடு நடத்திய சாரதிக்கும் தங்குமிட வசதி வழங்கிய இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரும் கைதாகியுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் ரக்வான பிரதேசத்தில் இருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.