உடல் வெப்பநிலையை அளவிடும் வெப்பமானிகள் மூளைக்கு தீங்கு விளைவிக்கின்றனவா?
கொரோனா வைரஸ் ஒரு பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும்கூட அது குறித்த போலிச் செய்திகள் பரவுவது குறைந்தபாடில்லை.
அந்த வகையில், சமீப காலமாக அதிகளவில் பகிரப்பட்டு வரும் சில கூற்றுகள் குறித்த உண்மைத் தன்மையை காண்போம்.
கூற்று: அகச்சிவப்பு வெப்பமானிகள் மூளைக்கு தீங்கு விளைவிக்கும்
உண்மைத்தன்மை: இந்த கூற்று தவறானது. அகச்சிவப்பு வெப்பமானிகள் அபாயகரமானவை அல்ல.
கல்வி நிலையங்கள் முதல் அலுவலகங்கள் வரை, வணிக வளாகங்கள் முதல் வழிபாட்டுத் தலங்கள் வரை, எங்கு சென்றாலும் நெற்றியில் அகச்சிவப்பு வெப்பமானியை கொண்டு உடல் வெப்பநிலையை அளவிடுவது என்பது சாதாரணமான ஒன்றாகிவிட்டது.
இந்த வெப்பமானிகள் உடலின் மேற்பரப்பில் இருந்து அகச்சிவப்பு கதிர்வீச்சை அளவிடுவதன் மூலம் ஒரு நபரின் வெப்பநிலையை பதிவு செய்கின்றன.
அதிக உடல் வெப்பநிலை என்பது கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான அறிகுறியாக கருதப்படுகிறது.
உடலில் இருந்து வரும் அகச்சிவப்பு கதிர்வீச்சை வெப்பமானி பதிவு செய்கிறது. அனைத்து பொருட்களின் மேற்பரப்புகளும் இந்த வகை கதிர்வீச்சை வெளியிடுகின்றன. எனவே, இந்த கருவியிலிருந்து எவ்வித கதிரும் மனிதர்களை நோக்கி செலுத்தப்படுவதில்லை.
இந்த நிலையில், இந்த செயல்முறை அபாயகரமானது என்ற போலியான தகவலை கூறும் காணொளி ஒன்றை யூடியூபில் இருபது லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத செவிலியர் ஒருவரின் கவலைகளை அந்த காணொளியில் விளக்கும் நபர், வெப்பமானிகளால் பினியல் சுரப்பி பாதிக்கப்படுவதாக கூறுகிறார்.
மெலடோனின் என்ற ஹார்மோனை கட்டுப்படுத்தும் இந்த சுரப்பி மூளையின் ஆழ்ந்த உட்பகுதியில் உள்ளது. ஆனால், உண்மையில் வெப்பமானிகளால் இந்த சுரப்பிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
“இது உங்களது கதிர்வீச்சை கணக்கிடுவதற்கான பாதுகாப்பான வழி” என்று கூறுகிறார் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான ஸ்டாஃபோர்ட் லைட்மேன்.
– Thanks BBC