ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் – அப்துல்லாஹியன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
காஸா பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஈரான் வெளிவிவகார அமைச்சர், யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி சமாதான உடன்படிக்கையை எட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
எந்தவொரு சமாதான உடன்படிக்கையும் ஒருதலைப்பட்சமாக இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, 5 வருடங்களுக்குள் பலஸ்தீன தேசம் அமைக்கப்பட வேண்டும் எனவும், அதனை நிறுவும் போது இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடாது எனவும் குறிப்பிட்டார்.
இந்தியப் பெருங்கடலில் பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிராந்தியத்தில் கடற்படை சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகள் மற்றும் இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஈரானிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக குறிப்பிட்டார்.
ஈரான்-இலங்கை பொருளாதார ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை திறக்க இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் விளக்கமளித்துள்ளார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் பணிப்பாளர் தினுக் கொழும்பகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.