யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் நியமன ஆர்ப்பட்டமும் அதன் பின்னால் மறைந்துள்ள நுண்ணரசியலும்….
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டமை தொடர்பாக 19.02.2024 ஆம் திகதி பழைய மாணவர்கள் சிலரும் அவர்களால் அழைக்கப்பட்ட பெற்றோர்கள் சிலரும் சேர்ந்து ஆர்ப்பட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.
ஆர்ப்பட்டத்தின் பின்னணி என்ன ?
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபராக நீண்டகாலம் கடமையாற்றிய எழில்வேந்தன் என்பவர் ஓய்வுபெறும் போது மத்திய கல்லூரியின் பிரதி அதிபராக இருந்தவரும் தற்போது நிரந்தர நியமனம் வழங்கப்பட்டவருமான திருமதி கிறிஸ்ரி சுகந்தினி என்பவரிடமே தனது பொறுப்புக்களை கையளித்திருந்தார். அப்போது தொடக்கமே குறித்த பெண் பிரதி அதிபர் பாடசாலையின் அதிபராகவோ அல்லது பதில் அதிபராகவோ வரக்கூடாது என்பதில் இப்போது ஆர்ப்பட்டம் செய்த பழைய மாணவர்குழு கடுமையான அக்கறையோடு இருந்து வந்துள்ளனர். அதன் ஒரு அங்கமாகவே, பாடசாலையின் பழைய மாணவனும் ஈ.பி.டி.பியின் அமைச்சுருமான டக்ளஸ் தேவனாந்தாவின் துணையோடு மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும் கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்வருமான இந்திரகுமார் என்பவரை மத்திய கல்லூரிக்கு பதில் அதிபராக்கியிருந்தார்கள்..
இந்திரகுமார் தான் கற்ற பாடசாலையான மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அதிபராக வருவதற்கு முயன்ற போதும் அந்தப் பாடசாலையின் பழைய மாணவர்களது எதிர்ப்பினால் அந்தப் பதவி கிடைக்காமல் தீவக கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி வந்தவர் என்பது வேறு கதை.
பதில் அதிபர் நியமனம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு ஒரு சில மாதங்களிலேயே பழைய மாணவர் சங்கத்தின் 2023 ஆண்டிற்கான புதிய நிர்வாகத் தெரிவுக் கூட்டம் நடைபெற்றது. அதில் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் சமூக பாதுகாப்பு திணைக்களத்தில் கடமையாற்றுபவருமான திரு.பிரதீபன் என்பவர் பழைய மாணவர் சங்கத்தின் தலைவராக வருவதற்கான முன்னெடுப்புகளை தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் மேற்கொண்டிருந்தார் அது டக்ளசின் ஆசீர்வாதத்தோடு தான் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்போடும் தலைவர் கனவோடும் வந்த ஈ.பி.டி.பியினருக்கு பழைய மாணவர்கள் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்து தலைவராக இலங்கை நிர்வாகசேவை அதிகாரியும் அப்போதைய ஆளுநரது செயலாளருமான திரு.பொ.வாகீசன் என்பவரை தெரிவு செய்திருந்தார்கள். அதுபோல ஏனைய தெரிவுகளிலும் பெரும்பாண்மை டக்ளசின் தாளத்திற்கு ஆடாதவர்களாகவே அமைந்து விட்டனர்.
புதிய நிர்வாகத் தெரிவு முடிந்தவுடன் ஸ்ரீதர் தியட்டருக்கு சென்ற டக்ளசின் ஆதரவாளர்கள் தலைவர் வாகீசனை எப்பிடியாவது செயற்பாடாமல் வைப்பதற்கான முடிவுகளை எடுப்பதற்கு தீர்மானித்தார்கள். அதன்படி கட்சிக் காரியாலத்திற்கு அவரை அழைத்து தமது சொல்லின்படியே செயற்பட வேணும் என்று கட்டளையிடுவது என்றும் அதற்கு அவர் சம்மதிக்காவிடின் தமக்கு ஆதரவான நிர்வாக குழு உறுப்பினர்களை பதவி விலகச் செய்ய வைத்து நிர்வாகத்தை இயங்க விடாமல் செய்வது எனவும் முடிவு செய்தார்கள். முதலாவது திட்டத்தின் படி வாகீசனை கட்சி அலுவலகத்திற்கு அழைத்தார்கள். வாகீசன் ஸ்ரீதர் தியேட்டருக்கு செல்வதற்கு மறுத்துவிட்டார். அழைப்பை ஏற்றுச் சென்ற ஏனையவர்களைச் சந்திக்க டக்ளஸ் மறுத்துவிட்டார்.
இந்நிலையில் ஸ்ரீதர் தியேட்டரில் போடப்பட்ட இரண்டாவது திட்டத்தின்படி பன்னிரெண்டு பேர் கொண்ட நிர்வாகக் குழுவில் இருந்த ஆறுபேரை பதவி விலக வைத்து பழைய மாணவர் சங்கத்தை இயங்கா நிலைக்கு கொண்டு வந்தார்கள். இதற்காக ஈ.பி.டி.பியை சேர்ந்த பிரதீபன் என்பவரால், மாவட்டச் செயலக புள்ளிவிபரத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திரு.வித்தியானந்தநேசன், அச்செழு பாடசாலை ஒன்றின் பதில் அதிபர் திரு.இராஜவரோதயன், திரு.றெனி மூக்குக் கண்ணாடிக் கடை ரவி சொலமன் ஆகியோர் பயன்படுத்தப்பட்டனர்.
பதவி விலகியவர்கள் தவிர மற்றப்பக்கத்தில் இருந்த விவசாய அமைச்சில் கடமையாற்றுபவரும் ஊடகவியலாளருமான திரு.ஐங்கரன் மக்கள் வங்கி உத்தியோகத்தரும் பேச்சாளருமான திரு.கர்சன், மாவட்டச் செயலக உத்தியோகத்தர் கஸ்ரோ ஆகியோரில் ஐங்கரன், கர்சன் ஆகிய இருவரும் ஏற்கனவே பழைய மாணவர் சங்கத்தில் இருந்தவர்கள் என்பதுடன் டக்ளஸ் தேவானந்தாவால் மதிக்கப்பட்டவர்கள் அவர்கள் இருவரும் பதவி விலகிய அந்த ஆறுபேருடன் உள்ளடக்கப்படவில்லை என்பது தனியான கதை.
வாகீசன் தலைமையிலான பழைய மாணவர் சங்கத்தை இயங்க விடக்கூடாது என்பது டக்ளசின் நிலைப்பாடு, தன்னை ஏமாற்றிய பழைய மாணவர்களை பழிவாங்க வேண்டும் என்பது பிரதீபனின் குறிக்கோள். இந்த இரண்டுக்குமாக பதில் அதிபர் இந்திரனை பயன்படுத்த தொடங்கினார்கள். ”உங்களை நிரந்தரமாக நியமனம் செய்வதாக இருந்தால் வாகீசன் தலைமையிலான பழைய மாணவர் சங்கத்தை இயங்க விடக்கூடாது” என நேரடியாகவே இந்திரனுக்கு உத்தரவிடப்பட்டது. நக்கினார் நாவிழந்தார் என்ற நிலையில் இந்திரனும் அதற்கு உடன்பட்டார்.
106 வருட பழைமையான பழைய மாணவர் சங்கத்தை தடைசெய்யும் அறிவிப்பை இந்திரன் வெளியிட்டார். பழைய மாணவர் சங்கத்தின் மாண்பினை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்குடன் வாகீசன் பதவி விலகினார். அத்துடன் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர டக்ளஸ் நினைத்த போதும் தனக்கு தலைவர் பதவி கிடைக்காத ஏமாற்றத்திற்கு பழி தீர்க்க நினைத்த பிரதீபன் டக்ளசுக்கு போட்டுக்கொடுத்து பழைய மாணவர் சங்கத்தை இல்லாமல் செய்து அதிபரை தலைவராகக் கொண்ட PPA என்பதை ஸ்தாபித்து மத்திய கல்லூரியின் பாரம்பரியத்தை உடைத்தெறிந்தார். இன்று 208 வருட பாரம்பரியம் என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் அவரும் அவர் சார்ந்தவர்களும் முதன் முதலாக பழைய மாணவர் சங்கத்தை இல்லாதொழித்தவராக பழைய மாணவர்களால் அடையாளப்படுத் தப்பட்டார்.
பன்னிரெண்டு பேரில் பதவி விலகிய ஏழுபேர் தவிர்ந்த ஏனைய எஞ்சியவர்கள் சற்றும் தளராமல் விசேட பொதுக்கூட்டம் ஒ்ன்றை தந்தை செல்வா அரங்கில் கூட்டி நூற்றுக்கு மேற்பட்ட பழைய மாணவர்களது ஒத்துழைப்போடு புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்தார்கள் . புதிய நிர்வாகம், பழைய மாணவர் சங்கத்தை மீள இயங்க வைப்பது தொடர்பாக இந்திரகுமாரோடு கலந்துரையாடல்களை மேற்கொண்ட போதும், பிரதீபன் குழுவின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக தன்னால் எதையும் செய்ய முடியவில்லை எனக் கைவிரித்திருந்தார் இந்திரகுமார். அதிபரது குறித்த செயற்பாட்டிற்கு எதிராக பழைய மாணவர் சங்கம், நீதிமன்றில் வழக்கினை தாக்கல் செய்தது, அந்த வழக்கு தற்போதுவரை நடந்துகொண்டிருக்கிறது.
டக்ளஸ் தேவானந்தா, தலைவர் வாகீசனை பழிவாங்குவதன் ஊடாக மத்திய கல்லூரியில் தன்னை மீறி எதனையும் செய்ய முடியாது என்பதை காட்டிவிட்டு, பதில் அதிபர் இந்திரனை நிரந்தரமாக்கித் தருவதாக கூறிய வாக்குறுதியை காற்றிலே பறக்க விட்டார். அதற்கு வேறு காரணங்களையும் சிலர் அறியத்தந்துள்ளார்கள். இந்திரகுமார் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அதிபராக வருவதற்கு முயற்சி செய்து அங்கு பழைய மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரனின் ஆதரவைக் கோரியிருந்ததாகவும், பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு அதிபராக வருவதற்கான முயற்சியினை மத்திய கல்வி அமைச்சில் உள்ள உயர் அதிகாரிகள் மூலம் மேற்கொண்டு வந்ததாகவும் கிடைத்த தகவல்களால் சினமடைந்த டக்ளஸ் அவரை நிரந்தர மாக்குவதில் அக்கறை காட்டவில்லையாம்.
கடந்த 19.02.2024 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பட்டம் கூட இந்திரகுமாரை நிரந்தரமாக்க முடியாது என்று தெரிந்தும் டக்ளசின் கட்டுப்பாட்டில் தான் பாடசாலை இருக்கிறது என்பதை காட்டுவதற்காக அவரால் ஏற்பாடு செய்யப்பட்டு அவரது கட்சிக்காரரான பிரதீபனால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அரசியலை அறிந்து கொள்ளாத அப்பாவிப் பெற்றோர்கள் . எல்லாவற்றையும் அறிந்த பின் அந்தக் குழுவை கண்டபடி விமர்சித்து வருகிறார்கள்.