சர்வாதிகார அரசுக்கு முடிவுகட்ட நாட்டு மக்களே அணிதிரளுங்கள் : பொன்சேகா
நீதித்துறையின் மீது
நம்பிக்கை இல்லை!
– சர்வாதிகார அரசுக்கு முடிவுகட்ட
நாட்டு மக்களே அணிதிரளுங்கள்
எனப் பொன்சேகா எம்.பி. அழைப்பு
“நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டால் அது நாட்டின் ஜனநாயகத்தைச் சீரழித்து – சர்வாதிகார அரசின் கைகளை மேலோங்கச் செய்யும். இந்தத் திருத்தச் சட்ட வரைவை எதிர்த்து நாம் நீதித்துறையை நாடினால் அதில் எமக்கு நம்பிக்கையில்லை. எனவே, இந்தச் சர்வாதிகார அரசுக்கு முடிவுகட்ட நாட்டு மக்கள் அனைவரும் எம்முடன் ஓரணியில் வீதியில் இறங்கத் தயாராகுங்கள்.”
– இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“முன்னைய கொடுங்கோல் ஆட்சியை மீண்டும் கொண்டுவருவதற்காகவே அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் ராஜபக்ச அரசு முன்வைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு நடைமுறைப்படுத்தப்பட்டால் ஜனநாயக நாடுகள் இலங்கையைப் புறக்கணித்தே தீரும். எனவே, நாட்டு மக்கள் அனைவரும் 20 ஆவது திருத்தத்தைத் தோற்கடிக்க நாட்டுக்காக ஒன்றுபட வேண்டும். எம்முடன் கைகோர்க்க வேண்டும்.
பொதுத்தேர்தலில் போலியான வாக்குறுதிகளை நம்பி ஆளுந்தரப்புக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை நாட்டு மக்கள் வழங்கியுள்ளமையால் அவர்களினாலேயே இந்தத் திருத்தத்தைத் தோற்கடிக்க முடியும். எதிர்க்கட்சிகளினால் மட்டும் இந்தத் திருத்தச் சட்ட வரைவைத் தோற்கடிக்க முடியாது. அதனாலேயே நாட்டு மக்களின் ஆதரவை வேண்டி நிற்கின்றோம். எதிர்வரும் நாட்களில் நாடெங்கும் எமது எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதில் இன, மத, கட்சி வேறுபாடின்றி மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக நாம் நீதித்துறையை நாடினாலும் அதில் எமக்கு நம்பிக்கையில்லை. ஏனெனில், நீதித்துறையிலும் ராஜபக்ச அரசின் நேரடி, மறைமுகத் தலையீடுகள் அதிகரித்துள்ளன” – என்றார்.