இந்தியன் பிறீமியர் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி.
ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா நைற் ரைடர்ஸ் அணியை 49 ஓட்டங்களால் வெற்றி கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைற் ரைடர்ஸ் அணியும் மோதின.
நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்யவே, மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
குயின்ரன் டி கொக், ரோஹித் சர்மா தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். ஆரம்பமே மும்பை அணிக்கு அதிர்ச்சியானது. சிவம் மவியின் புல் ஷொட் பந்தை எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்ப முயன்றார் கொக். உயர்ந்த பந்தை நிகில் நாயக் இலகுவாகப் பிடியெடுத்தார்.
ரோஹித்துடன் சூர்யகுமார் இணைந்து அதிரடி ஆட்டத்தைத் தொடங்கினார். இதனால் அணியின் ஓட்ட எண்ணிக்கை மளமளவென்று உயர்ந்தது. 10 ஓவர்களில் 98 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் சூரியகுமார் யாதவ் ஓட்டம் ஒன்றைப் பெற முற்பட்டு ரன் அவுட் ஆனார்.
அடுத்து வந்த திவாரி 21 ஓட்டங்களுடன் ஆடமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக ஆடி 6 சிக்ஸர், 3 பௌண்டரிகளுடன் 80 ஓட்டங்களைக் குவித்த ரோஹித் சர்மா ஆட்டமிழ்ந்து வெளியேறினார்.
கார்திக் பாண்ட்யா 18 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ரஸலின் யோர்கர் பந்தில் ஹிட் விக்கெட் ஆனார்.
20 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றது.
கொல்கத்தாவின் பந்து வீச்சில், சிவம் மவி 2 விக்கெட்களையும், சுனில் நரைன், ரஸல் ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
196 என்ற பெரும் இலக்கைத் துரத்த ஆரம்பித்த கொல்கத்தாவுக்கு தொடக்கம் கொடுத்த ஷப்மன் கில் (7 ஓட்டங்கள்) சுனில் நரைன் (9) என்று சோபிக்கவில்லை.
கப்டன் கார்த்திக் – ராணா இணை மட்டும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கார்த்திக் 30, ராணா 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பின் வந்த, மோர்கன் 16, ரஸல் 11, நாயக் 1 என்று சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
எனினும் அடுத்துக் களமிறங்கிய கம்மின்ஸ் அதிரடியாக ஆடினார். 4 சிக்ஸர் விளாசியவர் 12 பந்துகளில் 33 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் நிறைவில் கொல்கத்தா 9 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களையே பெற்றது. இதனால் அந்த அணி 49 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
மும்பை இந்தியன்ஸின் பந்து வீச்சில், போல்ட், பற்றின்ஸன், பும்ரா, சாகர் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
ஆட்டநாயகனாக ரோஹித் சர்மா தெரிவானார்