மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுத்த கணவர்; கேரளாவைச் சேர்ந்த கர்ப்பிணி மரணம்

திருவனந்தபுரம்: கர்ப்பிணி ஒருவரைப் பிரசவத்துக்காக மருத்துவமனை அழைத்துச் செல்ல அவரது கணவர் மறுத்துவிட்ட நிலையில், அப்பெண் பிரசவத்தின்போது மாண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் பிப்ரவரி 20ஆம் தேதியன்று நிகழ்ந்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்தது.
நயாஸ் என்று அழைக்கப்படும் அந்த ஆடவரை கேரளக் காவல்துறை கைது செய்துள்ளது. கொலைக் குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை கூறியது.
நிறைமாதக் கர்ப்பிணியான ஷெமீராவை, கணவர் நயாஸ் மருத்துவமனையில் சேர்க்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்கக் கோரி சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்காமல் நயாஸ் அலட்சியம் செய்தார்.
யூடியூப் காணொளிகளைப் பார்த்து வீட்டிலேயே குழந்தையைப் பெற்றெடுக்கலாம் என்று கூறி, தமது மனைவியான 36 வயது ஷெமீரா பீவியை அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஷெமீரா, நயாஸின் இரண்டாவது மனைவி.
அவருக்கும் ஷெமீராவுக்கும் ஏற்கெனவே மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
அந்தப் பிள்ளைகளை ‘சிசேரியன்’ அறுவை சிகிச்சை மூலம் ஷெமீரா பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பிரசவ வலியால் ஷெமீரா துடித்தார். தமது முதல் மனைவியின் உதவியுடன் ஷெமீராவுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்க நயாஸ் முயன்றார். பிரசவத்துக்கு ‘அக்கியூபங்சர்’ முறை பயன்படுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.
இதில் வலி தாங்க முடியாமல் சிறிது நேரத்தில் ஷெமீரா மயக்கமடைந்தார்.
இதைக்கண்ட அருகில் உள்ளவர்கள் ஷெமீராவை உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஷெமீராவை பரிசோதித்த மருத்துவர்கள், அவரும் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
அதிகளவிலான ரத்தப்போக்கு காரணமாக ஷெமீரா உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.
“இந்தச் சம்பவம் அதிர்ச்சியைத் தருகிறது. இது கொலைக் குற்றமாகும். கேரளாவில் இத்தகைய சம்பவம் நடந்திருக்கவே கூடாது,” என்று கேரள மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
ஷெமீரா மரணம் தொடர்பாக அவர் தங்கி இருந்த வீட்டை ‘சீல்’ செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலதிக செய்திகள்
நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் – மொட்டுக் கட்சி எம்.பி. சந்திரசேன கோரிக்கை.
ஆர்.ஆரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்!
தாய்மொழிப் பள்ளிகள் அரசமைப்புச் சட்டத்துக்கு ஏற்றவையே: மலேசிய கூட்டரசு நீதிமன்றம்.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுத்த கணவர்; கேரளாவைச் சேர்ந்த கர்ப்பிணி மரணம்
ராவணன் அருவியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
த.வெ.க. முதல் மாநாட்டை மதுரையில் நடத்த விஜய் திட்டம்!
போராடினால் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை – விவசாயிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசு!
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் பொறியியலாளர் ஒருவர் கைது.
IMF சீர்திருத்தங்கள் சரியாக செய்யப்படாவிட்டால் பொருளாதாரத்தில் மோசமான விளைவுகள்.