ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடவே முடியாது; இந்த விடயத்தில் எந்த விளையாட்டும் எடுபடாது – இப்படி எஸ்.பி. கூறுகின்றார்.
“ஜனாதிபதித் தேர்தலுடன் விளையாட முடியாது. எனவே, அரசமைப்பின் பிரகாரம் குறித்தொகுக்கப்பட்டுள்ள காலப் பகுதிக்குள் அது நடந்தாக வேண்டும்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடவே முடியாது. இந்த விடயத்தில் எந்த விளையாட்டும் எடுபடாது. எதிர்வரும் செப்டெம்பர், ஒக்டோபரில் தேர்தல் நடத்தப்படும். இதற்கான அழைப்பை தேர்தல் ஆணைக்குழு விடுக்கும். தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் கீழேயே தேர்தல் நடக்கும். அதில் மாற்றம் வராது.
அதேவேளை, நாட்டில் தற்போதுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைவிட பலமானதொரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையே நாட்டுக்குத் தேவை என்பது எனது கருத்தாகும். இது எனது தனிப்பட்ட கருத்து, கட்சியின் நிலைப்பாடு அல்ல.
அப்படியானதொருவர் என நினைத்துத்தான் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்தோம். ஆனால், அது நடக்கவில்லை.” – என்றார்.