கைத்தொலைபேசி திருடி விற்ற குற்றச்சாட்டில் ஒருவர் சிக்கினார்.
வவுனியா நகரப் பகுதியில் கைத்தொலைபேசி திருடி விற்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, பழைய பஸ் நிலையப் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஊடக நிறுவனம் ஒன்றில் சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி ஒன்று திருட்டுப் போயுள்ளது என்று வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
முறைப்பாட்டையடுத்து தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெயக் கொடியின் வழிகாட்டலில், குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ஜயத்திலக தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் அஹமட், பொலிஸ் சார்ஜன் திஸாநாயக்கா, பொலிஸ் கான்ஸ்டபிள்களான உபாலி, தயாளன், ரணில் ஆகியோர் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது குறித்த கைத்தொலைபேசி நகரப் பகுதியில் உள்ள கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் மீட்டதுடன், அந்தக் கைத்தொலைபேசியை திருடி விற்ற நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபராவார்.
மீட்கப்பட்ட கைத்தொலைபேசியையும், கைது செய்யப்பட்ட நபரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.