தேர்தல்களில் வெற்றி வாகை சூடுவோம்! – புதிய அரசியல் கூட்டணியின் முக்கியஸ்தர் சுசில் சூளுரை.

“ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என்பன உரிய நேரத்தில் நடத்தப்படும். குறித்த தேர்தல்களின் எமது புதிய கூட்டணி வெற்றி வாகை சூடும் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன். அதற்குச் சான்றாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50 பேர் எம்முடன் இணையத் தயாராகவுள்ளனர்.”
இவ்வாறு புதிய அரசியல் கூட்டணியின் கொழும்பு மாவட்டத் தலைவரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
புதிய அரசியல் கூட்டணியின் கொழும்பு மாவட்ட முதலாவது பொதுக்கூட்டம் நேற்று (24) ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கடந்த ஜனவரி மாதம் ஜா – எலயில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தை விட பன்மடங்கு மக்கள் தொகையுடன் இன்று கொழும்பில் எமது முதலாவது கூட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இன்று இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உட்பட மட்டக்களப்பின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் என்னுடன் இணைத்துள்ளனர்.
தற்போது சில அரசியல் கட்சிகள் தமக்குப் போட்டியாக அரசியலில் வேறு எந்தப் பலமும் இல்லை என்று எண்ணிக்கொண்டிருக்கின்றன. அந்த எண்ணம் தவறானதாகும். அவ்வாறு எண்ணும் கட்சிகளுக்குச் சவாலாக எமது புதிய கூட்டணியை நாம் உருவாக்கியிருக்கின்றோம்.
எமது கூட்டணி இளம் தலைமுறையினரின் நிலைப்பாடுகளுக்கும் கொள்கைகளுக்கும் இடமளிக்கும் கூட்டணியாக அமைந்துள்ளது. வெற்றிக்கான கூட்டணியை அமைப்பதற்குப் பல ஆண்டுகள் தேவையில்லை. ஆறு மாத காலத்துக்குள் வெற்றியை நோக்கிய பயணத்தை இலக்காகக் கொண்டு எமது கூட்டணி கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாட்டில் எவ்வாறான நிலைமை காணப்பட்டது என்பதை சகலரும் அறிவார்கள். அன்று இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை சில அரசியல் சக்திகள் தமது சந்தர்ப்பவாத அரசியலுக்காக பயன்படுத்திக்கொள்ள முயற்சித்தன.
அதன் அடிப்படையிலேயே ஜனாதிபதி அலுவலகமும், பிரதமர் அலுவலகமும் கைப்பற்றப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை முற்றுகை இடுவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. எனினும், அந்த முயற்சி தடுக்கப்பட்டது. அதன் காரணமாகவே இலங்கையில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. இல்லை என்றால் இன்று ஜனநாயகம் கேள்விக்குறிக்குள்ளாகியிருக்கும்.
2009ஆம் ஆண்டு பிரபாகரனின் யுத்தம் நிறைவடைந்தது. ஆனால், அதன் பின்னர் பொருளாதார யுத்தம் ஆரம்பித்தது. அந்த யுத்தம் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. எனவே, எமது புதிய கூட்டணியின் இலக்கு பொருளாதார யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தியடைச் செய்வதாகும்.
2022ஆம் ஆண்டு மே மாதம் நான் எனது அமைச்சைப் பொறுப்பேற்கும்போது பாடசாலை புத்தகங்களையோ சீருடைகளையோ வழங்க முடியாத நிலைமை காணப்பட்டது. ஆனால், இன்று முதலாம் தவணை ஆரம்பித்த உடனே எம்மால் பாட புத்தகங்களை விநியோகிக்க முடிந்துள்ளதோடு சீருடைகளையும் வழங்க முடிந்துள்ளது.
தற்போது தொழில் இன்றி உள்ள புதிய பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கத் தயாராகவுள்ளோம். கடந்த 75 ஆண்டுகளாக ஏமாந்தது போதும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் உள்ளனர். எனவே, மக்கள் மாற்றத்தையும் புதுமையையும் எதிர்பார்க்கின்றனர். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் எமது புதிய கூட்டணி செயல்படும்.
அதற்கமைய எமது அடுத்த கூட்டம் இதனை விட பன்மடங்கு மக்கள் தொகையுடன் முன்னெடுக்கப்படும். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50 பேர் எம்முடன் இணையத் தயாராகவுள்ளனர். தற்போது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பேசப்படுகின்றது. அரசமைப்புக்கு அமைய ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்துக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அந்த இரு தேர்தல்களும் குறிப்பிட்ட தினத்தில் இடம்பெறும். குறித்த உத்தேச தேர்தல்களில் எமது புதிய கூட்டணி பாரிய வெற்றி பெறும் என்று நம்புகின்றோம். அந்த வெற்றிப் பயணத்துக்கான நடவடிக்கைகளையே நாம் இன்று ஆரம்பித்துள்ளோம். கற்பனைக் கதைகளால் மாத்திரம் எதையும் செய்துவிட முடியாது. எனவே, வார்த்தைகளால் மாத்திரமின்றி செயற்பாடுகளாலும் நாம் எமது வெற்றியை நிரூபித்துக் காட்டுவோம்.” – என்றார்.