இந்திய மீனவர் விடுதலை தொடர்பில் இன்று விசேட பேச்சு!
இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 இந்திய மீனவர்களின் விடுதலை தொடர்பில் இன்று இலங்கை – இந்தியா இடையே விசேட பேச்சு நடைபெறவுள்ளது.
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்ட இந்தியாவின் தமிழக மீனவர்கள் ஐவர் தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
சிறைத் தண்டனை அனுபவிக்கும் ஐவரில் மூவருக்கு 6 மாத சிறைத் தண்டனையும், இருவருக்கும் ஓர் ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களை விடுவிப்பது தொடர்பிலேயே இன்று பேச்சு இடம்பெறவுள்ளது.
இன்றைய பேச்சுக்கான ஏற்பாடுகள் மற்றும் அதில் கலந்துகொள்வோருக்கான ஒழுங்குகள் தொடர்பில் நேற்றுமுன்தினம் இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் துணைத் தூதுவர் சத்தியான்ஜல் பாண்டே, இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
இந்திய மீனவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழக மீனவர்கள் கச்சதீவு திருவிழாவைப் புறக்கணித்த நிலையில், தற்போது இராமேஸ்வரத்தில் தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.