மட்டக்களப்பு மக்களின் காணி உரிமத்தினைப் பெற்றுக்கொடுக்க துரித நடவடிக்கை.
மட்டக்களப்பு மக்களின் காணி உரிமத்தினைப் பெற்றுக்கொடுக்க சகல பிரதேச செயலாளர்களும் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்கள் குடியிருக்கும் காணிகளுக்கான உரிமத்தினைப் பெற்றுக் கொடுக்க சகல பிரதேச செயலாளர்களும் துரித நடவடிக்கை எடுக்கவேண்டுமென மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா பிரதேச செயலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இம்மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவிவுகளிலும் கடமையாற்றி வருகின்ற பிரதேச செயலாளர்களுக்கான மாநாடு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (22) ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வேண்டு கோளை விடுத்தார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைவாக பொதுமக்கள் குடியிருக்கும் காணிகள், மற்றும் அவர்களால் பராமரிக்கப்பட்டுவரும் காணிகள், தோட்டங்கள், விவசாய நிலங்கள் போன்ற வற்றின் உரிமத்தினைப் பெற்றுக் கொடுக்கும் செயற்றிட்டத்தின்கீழ் இத் துரித நடவடிக்கையினை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுதவிர அரசாங்கத்தின் சேவைகளை மக்கள் காலடிக்குக் கொண்டு செல்லும் நோக்குடன் பிரதேச செயலகங்களால் செயற்படுத்தப்பட்டு வருகின்ற சேவைகள் பற்றிய முன்னேற்றங்கள் இங்கு ஆராயப்பட்டன.
மேலும் இம்மாவட்டத்தில் சுமார் 690 மல்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சப்பிரிகம வேலைத்திட்டத்திலான 524 திட்டங்களினதும், 20 மில்லியன் ரூபா செலவிலான கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருததி வேலைத்திட்டதிலான 26 திட்டங்களினதும், 16.82 மில்லியன் ரூபா செலவிலான யானை வேலிகளுக்கான பாதுகாப்பு கூடாரங்கள் அமைக்கும் 18 திட்டங்களினதும் முன்னேற்றங்கள் பற்றி இங்கு ஆராயப்பட்டது.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இம்மாநாடு ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் திருமதி. நிஹாறா மௌஜுதின் ஏற்பாட்டில் ஏறாவூர் நகர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட பொறியிலாளர் வீ. சுமன், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திருமதி. இந்திரா மேகன், மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் திருமதி. ஏ. பாக்கியராஜா மற்றும் அனைத்து பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக தினைக்களங்களின் உயர் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.