எமது எதிர்காலச் சந்ததிகளாவது நிம்மதியாக வாழக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்! – நீதி அமைச்சர் விஜயதாஸ சுட்டிக்காட்டு.

“இந்த நாட்டைக் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுவிப்பதற்காகத் தமிழர், சிங்களவர் பறங்கியர், முஸ்லிம்கள், மலேயர்கள் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து 1948 ஆம் ஆண்டில் சுதந்திரத்தைப் பெற்ற போதும் 1972ஆம் ஆண்டு அரசமைப்பை மாற்றி பூரண சுதந்திரத்தைப் பெற்றோம். இந்த ஒற்றுமையை அரசியல்வாதிகள் பிரித்து நாசமாக்கி அரசியல் செய்தார்கள். இதனால் நாட்டில் சமாதானம் இல்லாம் போய்விட்டது. எனவே, எமது எதிர்காலச் சந்ததிகளாவது நிம்மதியாக வாழக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.”
இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள சகவாழ்வு சங்கங்களுக்கு மாவட்ட மட்ட ஆலோசகர் சபை அமைக்கும் நிகழ்வும், அவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வும் இன்று (25) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அரசியல் குழப்பம் காரணமாக மிகவும் துன்பகரமான காலத்தில் இருந்திருக்கின்றோம். இந்த நாட்டிலே நாங்கள் பிறந்தது அதிஷ்டமாக இருந்தபோதும் கடந்த 40 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக இந்த நாட்டில் நாங்கள் பிறந்தது துரதிஷ்டமானது என நினைத்தோம்.
கடந்த காலங்களில் நாங்கள் கிராமங்களை அழித்தோம், குண்டு வைத்தோம், எரித்தோம் என்று வன்முறைகளில் ஈடுபட்டோம். அப்படியான ஒரு நாட்டில்தான் இவ்வளவு காலமாக வாழ்ந்து வருகின்றோம்.
அரசியல்வாதிகள் செய்த பெரும் தவறால் இந்த நாட்டில் சமாதானம் இல்லாம் போய்விட்டது
ஜனநாயகம் என்பது நாட்டில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதைத்தான் குறிப்பிடுகின்றது இருந்தபோதும் ஜனநாயகத்துக்கு எதிராக அரசியல் தலைவர்கள் சிலர் செயற்படுகின்றனர்.
நாங்கள் இந்த நாட்டை அழித்து நாட்டைப் பயன்படுத்தாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவே, நாட்டில் எல்லோரும் ஒன்றிணைந்து எதிர்காலச் சந்ததிகளாவது நிம்மதியாக வாழக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.” – என்றார்.