மாணவர்கள் புரிந்துகொள்ளவே இஸ்ரேல்-ஹமாஸ் பாடங்கள் : சிங்கப்பூரின் கல்வி அமைச்சர்.
இஸ்ரேல்-ஹமாஸ் பூசல் பற்றிய கல்வி அமைச்சின் பாடங்கள், பூசல் பற்றி மாணவர்கள் புரிந்துகொள்வதற்காகத்தான் என்றும் யார் மீதும் பழிபோடுவதற்கு அல்ல என்றும் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்து உள்ளார்.
அந்தப் பூசல் பற்றிய கல்வி அமைச்சின் ‘நற்பண்பு, குடியியல் கல்வி’ பாடங்கள், பல இன சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதையும் மாறுபட்ட கருத்துகளுக்கு மதிப்பு அளிப்பதையும் பிரதிபலிப்பதாக அவர் விளக்கி உள்ளார்.
மாணவர்கள் இதுபோன்றவற்றைத் தெரிந்துகொள்ள உதவும்பொருட்டு பூசல் குறித்து பாடங்களில் விளக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்தப் பாடங்கள் வரலாற்றுப் பாடங்களோ, யார் தவறு? யார் சரி? என்பதை விளக்குவதற்கான பாடங்களோ அல்ல என்று செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் விளக்கினார்.
மாணவர்கள் தங்களது சொந்த உணர்வுகளைப் புரிந்துகொள்வதிலும் மற்றவர்களிடம் இரக்கம் காட்டுவதிலும் உதவுவதே கல்வி அமைச்சின் பாடங்களின் நோக்கம் என்றார் அமைச்சர்.
சிங்கப்பூரின் சமூகக் கட்டமைப்பையும் பிரச்சினை தொடர்பான பல்வேறு தகவல்களையும் விளக்கிய அமைச்சர், சிக்கலான விவகாரத்தைப் புரிந்துகொள்வதில் உதவ மாணவர்களுடன் வெளிப்படையான விவாதங்களை நடத்துவது மிகவும் அவசரமானது என்றார்.
கல்வியாளர்களின் நிபுணத்துவ மேன்மைக்கு அமைச்சர் சான் நன்றி தெரிவித்தார். பிரச்சினை தொடர்பில் கல்வியாளர்களுக்கும் சொந்த உணர்வுகளும் திடமான நம்பிக்கைகளும் இருந்தபோதிலும் மாணவர்கள் மீது அவற்றை அவர்கள் திணிக்கவில்லை என்றார் அவர்.
காஸா பூசல் பற்றி பள்ளிகளில் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுவதன் தொடர்பில் கடந்த வாரம் இணையத்தில் அக்கறைகள் பரவியதைத் தொடர்ந்து அமைச்சரின் கருத்து வெளிவந்து உள்ளது.
எஸ்பிஎச் மீடியா மற்றும் மீடியாகார்ப் செய்தியாளர்களிடம் அவர் இதுகுறித்து விரிவாகப் பேசினார்.
நற்பண்பு, குடியியல் பாடங்களில் இஸ்ரேல்-ஹமாஸ் பூசல் பற்றி விளக்கப்படுகிறது. அந்தப் பாடங்களில் பயன்படுத்தும் குறிப்புகளை சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்த பெற்றோர் சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.
பூசலுக்கான வரலாற்றுப்பூர்வ காரணம் அந்தப் பாடங்களில் விளக்கப்படவில்லை என்பது அவர்களின் முக்கிய அக்கறையாக இருந்தது.
இருப்பினும், சமூக ஊடகங்களில் வெளியானவை முழுமையான தகவல்கள் அல்ல என்று அமைச்சர் சொன்னார்.
இதுபோன்ற சிக்கலான விவகாரத்தைக் கையாள்வதில் உள்ள சவால்களை கல்வி அமைச்சு முன்னரே அறிந்திருந்ததாக அவர் கூறினார்.
“இஸ்ரேல்-ஹமாஸ் பூசலாக இருந்தாலும் ரஷ்ய-உக்ரேன் பூசலாக இருந்தாலும் அவற்றை நற்பண்பு, குடிமையியல் பாடத்தில் விளக்கும்போது அதன் தொடர்பில் வெவ்வேறு மக்களிடம் இருந்து வெவ்வேறு கருத்துகள் கிளம்பும் என்பதை நாங்கள் முழுமையாக எதிர்பார்ப்போம்.
“அவற்றை எதிர்கொள்ள மனதளவில் தயாராக இருப்போம்.
“இதுபோன்ற விவகாரங்கள் தொடர்பில் பாடங்களைக் கற்பதில் சவால்கள் இருந்தபோதிலும் தலைமை ஆசிரியர்களுடனும் ஆசிரியர்களுடனும் அமைச்சு ஒன்றுகலந்து பேசுகையில், பொதுவான நோக்கத்திற்கு அவர்கள் அனைவரும் உடன்பட்டனர்.
“இதுபோன்ற விவகாரங்களில் சிங்கப்பூரர்களாக நாம் எவ்வாறு பதிலளிப்போம் என்பதற்கான நெறிமுறையை உருவாக்குவதே அந்த நோக்கம்,” என்றார் அவர்.