குடாநாட்டில் அண்மையில் இரண்டு உயிரிழப்புக்கள் ஏற்பட்ட பின்னரும் தொடரும் ஆபத்தான பயணங்கள்.
யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பஸ்ஸின் மிதிபலகையில் இருந்து தவறி வீழ்ந்து இருவர் உயிரிழந்துள்ள நிலையிலும், பயணிகள் பஸ்ஸின் மிதிபலகையில் தொங்கியவாறு ஆபத்தான பயணங்களை இன்னமும் தொடர்கின்றனர்.
பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சிலர் யாழ். நகர் பகுதியில் இருந்து காரைநகர் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸில், மிதிபலகையில் தொங்கியவாறு பயணிக்கும்போது , வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதுண்டு விழும் காட்சிகளை ஒருவர் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து, தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
அந்தக் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த 19ஆம் திகதி பஸ்ஸை நிறுத்த முதல், பெண்ணொருவர் இறங்க முற்பட்ட வேளை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அதேவேளை, கடந்த 23ஆம் திகதி நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக, பஸ்ஸின் மிதி பலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்த இரு உயிரிழப்புக்கள் அண்மையில் இடம்பெற்ற நிலையிலும், ஆபத்தான மிதிபலகைப் பயணத்துக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.