சபாநாயகர் மீதான நம்பிக்கையை நாங்கள் இழந்ததால் அவருக்கு எதிராகப் பிரேரணை – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விளக்கம்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அரசமைப்பு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை ஆகிய இரண்டையும் மீறியதால் அவர் மீதான நம்பிக்கையை இழந்துள்ளோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இன்று கையெழுத்திட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நமது நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பில் நிறைவேற்று, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய 3 முக்கிய தூண்கள் செயற்படுகின்றன. சட்டங்களை ஏற்றுக்கொள்வது சட்டமன்றத்தின் மூலம் செயற்படுத்தப்படுவதோடு, அதன் சட்ட மற்றும் அரசமைப்பு அமுலாக்கம் சபாநாயகர் தலைமையிலான அதிகாரிகளின் பொறுப்பாகும். நிகழ்நிலைக் காப்புச் சட்டம் சட்டவிரோதமான முறையிலயே சட்டமாக மாறியுள்ளது.
இந்தச் சட்ட வரைவு குறித்து உயர் நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகள் மற்றும் தீர்ப்புகளை முற்றிலுமாக நிராகரித்து, சபாநாயகர் தலைமையில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அவர் கையெழுத்திட்டு, உயர் நீதிமன்றத்தின் உயர் சட்டத்தை மீறி சட்டவிரோதமான முறையில் இதை நாட்டின் சட்டமாக்கியுள்ளார். இதன் மூலம் சபாநாயகர் அரசமைப்புச் சட்டத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளையும் மீறியுள்ளது.
சபாநாயகர் அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உயர் சட்டத்தைப் பின்பற்றி, சட்டங்களைச் சரியாகவும் முறையாகவும் நிறைவேற்ற வேண்டும். அதை அவர் வேண்டுமென்றே மீறினார். எனவே, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நிறைவேற்றும் நடவடிக்கையில் சபாநாயகரின் செயற்பாடுகள் அதிருப்தியளிக்கின்றன. அவர் மீதான நம்பிக்கை அற்றுப்போயுள்ளது.
நான் உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல தடவைகள் சபைக்கு உள்ளேயும் வெளியேயும் இந்தத் தவறை சரி செய்யுமாறு முன்மொழிவுகளைச் சமர்ப்பித்த போதும், அதனை வேண்டுமென்றே நிராகரித்ததன் மூலம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அத்தகைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் இல்லை என்பதனால் நாம் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்துள்ளோம். அடுத்த கட்சித் தலைவர் கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடப்பட்டு, அதன் பின்னர் இவ்விவகாரத்தை உடனே விவாதத்துக்கு எடுத்து பதவியில் இருந்து அவரை நீக்க நடவடிக்கை எடுப்போம்.” – என்றார்.