கோதை
பாகம் ஒன்று
வீட்டு வன்முறைகள் பலவிதமாக ஒரு குடும்பத்தில் அல்லது ஒரு உறவு முறைமைக்குள் ஏற்படுகிறது. இவை பாலியல் வன்முறை உள்ப்பட ஒருவரைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், ஒருவரை கட்டாயப்படுத்துதல், அவரை அச்சுறுத்துதல், வெல்வேறு விதங்களாக இழிவு படுத்தல் மற்றும் பல விதமான வன்முறை நடத்தைகளின் ஒரு நிகழ்வாகவோ அல்லது இவை அனைத்தையும் உள்ளிட்ட ஒரு கூட்டுச் சம்பவங்களின் தொகுப்பாகவோ பார்க்கலாம்
அநேகமான சந்தர்ப்பங்களில் இப்படியான வன்முறைச் சம்பவங்கள் ஒரு கணவன் மனைவிக்கிடையேயோ அல்லது முன்னாள் கணவன் மனைவிக்கிடையிலோ நடைபெற்றாலும் கூட இது ஒரு குடும்ப உறுப்பினர் அல்லது ஒரு உறவில் இருக்கும் ஒருவரால் அக்குடும்ப அங்கத்தவர் அல்லது உறவு முறையில் உள்ள இன்னொருவர் மீது மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறலாம். இக்குடும்ப வன்முறையானது ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவானதாக இருந்த போதிலும் உலகளாவிய ரீதியில் இது ஆண்களை விட பெண்களையே கூடுதலாகப் பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக ஆண்களால் பெண்களுக்கு ஏற்படுத்தப்படும் குடும்ப வன்முறைகள் பெண்களால் ஆண்களுக்கு ஏற்படுத்தப்படும் குடும்ப வன்முறைகளை விட அதிகமாக உள்ளது ஆய்வுகளில் தெளிவாகியுள்ளது. இப்படியான வன்முறைகளில் பின்வருவன சில முக்கியமானவையாக இருப்பினும் இவற்றை விட வேறு விதமான துன்புறுத்தகளும் இருக்கலாம் எனத் தெரிய வருகிறது.
-கட்டாயக் கட்டுப்பாட்டு முறைகளை விதித்தல்.
(உடல் அல்லது பாலியல் வன்முறையின் ஊடாக ஒருவரைக் கட்டுப்படுத்தல், இதனுடன் தொடர்பான அச்சுறுத்தல், மிரட்டல், சீரழிவு, தனிமைப்படுத்தி வைத்திருத்தல் போன்ற கட்டுப்பாடுகள் இவற்றில் அடங்குகின்றன.)
-உளவியல் அல்லது உணர்ச்சித் துஷ்ப்பிரயோகம்,
-உடல் அல்லது பாலியல் துஷ்ப்பிரயோகம்.
-நிதி அல்லது பொருளாதார துஷ்ப்பிரயோகம்.
-ஒருவரைப் பின்தொடருதல் அல்லது துன்புறுத்துதல் .
-டிஜிட்டல் துன்புறுத்தல்.
ஒரு பெண்ணானவள் தன் இனம், மதம், மொழி, பாலியல் வேறுபாடுகள், வர்க்கம், இயலாமை போன்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரு குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கப் படலாம் என்பது கவலைக்குரிய ஒரு யதார்த்தமாகிறது. இத்துடன் கூட்டுப் பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு வகையான பாலியல் கொடுமைகள், துன்புறுத்தல்களுக்கு உள்ளாவது ஆண்களை விடப் பெண்களே அதிகம் என்பது நிரூபணமாகியுள்ளது. இதை விடவும் குறிப்பிட்ட சில சமூகங்களில் உள்ள பெண்கள் வேறு விதமான குடும்ப வன்முறைகளுக்கு உள்ளாவது மட்டுமல்ல அதைப் பற்றிய போதுமான அறிவோ அல்லது அதை எங்கு போய் முறைப்பாடு செய்வது என்ற அறிவோ இல்லாது இருப்பதும் கவலைப்படும் நிலையில் தான் உள்ளது. இவ்வகையான பெண்களுக்கு உதவி கிடைப்பதற்கு மற்றைய குடும்ப வன்முறையை அனுபவிக்கும் பெண்களை விட நீண்ட காலமும் பல தடைகளும் ஏற்படுகிறது. இவர்களில் பலர் தற்கொலை அல்லது மன அழுத்தத்திற்கு ஆளாகுகிறார்கள்.
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமானது பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை பின்வருமாறு வரையறை செய்கிறது.
“பாலின அடிப்படையில் வரையறுக்கப்படுகிற பெண்களுக்கெதிரான குடும்ப வன்முறையானது இவர்கள் பெண்கள் என்பதன் அடிப்படையில் மட்டுமே தூண்டப்படுவதால் இது பெண்களை பெரிய விகிதாசாரத்தில் பாதிக்கும் ஒன்றாக இருக்கிறது.”
இது உடல், மனம், அல்லது பாலியல் தீங்கு அல்லது இத்துடன் தொடர்பான செயல்களின் அச்சுறுத்தல்கள், வற்புறுத்தல் மற்றும் ஒரு பெண் தன் சுதந்திரத்தை இழக்கப் பண்ணுவதற்கான சகல செயல்களும் இதில் அடங்கி விடுகிறது.
வீட்டு வன்முறை அல்லது குடும்ப வன்முறையை எல்லா சந்தர்ப்பங்களிலும் எளிதாக அடையாளம் காண்பது சிக்கலாகவே இருக்கிறது. சில உறவுகள் ஆரம்பத்திலிருந்தே தெளிவாக தெரியும் விதத்தில் தவறாகவே இருந்தாலும் இது உறவுகளின் அடிப்படையில் நுட்பமான விதத்தில் ஆரம்பிக்கப்பட்டு, சில காரணங்களினால் கண்டு கொள்ளாமல் விடப்பட்டு பின்னர் காலப்போக்கில் மோசமாகிறது.
இப்படியான வீட்டு அல்லது குடும்பம் சார்ந்த வன்முறையை எவ்வாறு அறிந்து கொள்வது இது தொடர்பில் வன்முறைக்குட்படுத்தப்பட்டவர் என்ன செய்யலாம் என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.
தொடரும்…