சாந்தனின் இறுதி நிகழ்வு ஞாயிறன்று வடமராட்சியில் சென்னையில் இருந்து வந்தடைந்தது பூதவுடல்.
சென்னையில் உயிரிழந்த ஈழத்தமிழன் சாந்தனின் (தில்லையம்பலம் சுதேந்திரராஜா) பூதவுடல் இன்று நண்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. அவரது பூதவுடல் கொழும்பில் இருந்து தரை வழியாக யாழ்ப்பாணம் கொண்டு வரப்படவுள்ளது.
இந்நிலையில், சாந்தனின் பூதவுடல் வழமையான பயணிகள் விமானத்தில் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது என்றும், அவரது பூதவுடல் தனியார் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிறுக்கிழமை தமது இல்லத்தில் (வடமராட்சி – உடுப்பிட்டி) நடைபெறவுள்ளது என்றும் சாந்தனின் சகோதரர் மதிசுதா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன், பல போராட்டங்களின் பின்னர் தாயகம் திரும்பவிருந்த நிலையில், நேற்றுமுன்தினம் காலை சென்னை ராஜீவ் காந்தி அரச மருத்துவமனையில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
தனது தாயின் கையால் உணவு உண்ண வேண்டும் என்ற ஆசையில் காத்திருந்த மகன், பூதவுடலாக வந்துள்ளமை ஈழத்து மக்களைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.