சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் பலி
செங்கல்பட்டில் வீட்டில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் தீயில் உடல் கருகி பலியாகினர். பலத்த தீக்காயமடைந்த குழந்தைகளின் தாய், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பெரிய மணியக்காரத் தெருவில் வசிப்பவா் வட மாநிலத்தைச் சோ்ந்த சதாம் (30). இவா், கடந்த 6 ஆண்டுகளாக ரயில் நிலையத்தில் தேநீா் விற்று வியாபாரம் செய்து வருகிறாா். வியாழக்கிழமை மாலை வழக்கம் போல், சதாம் தேநீா் வியாபாரம் செய்ய சென்றாா்.
அவரின் மனைவி மற்றும் 3 குழந்தைகள் வீட்டில் இருந்துள்ளனா்.
இந்த நிலையில் வீட்டில் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டிருந்ததைக் கவனிக்காமல், சதாமின் மனைவி ராஜ்கத்தோம் அடுப்பைப் பற்ற வைக்க முயன்றபோது, தீப்பற்றி வீடு முழுவதும் பரவியதில் ராஜ்கத்தோம், குழந்தைகளான ராஜியா பட்வின் (8), சயலி (4), அல்தாப் (1) ஆகிய 4 பேரும் பலத்த தீக்காயம் அடைந்தனா்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் செங்கல்பட்டு நகரக் காவல் நிலையம், தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனா். அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினா், உயிருக்குப் போராடியவா்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தைகள் ராஜியா பட்வின்(7), அல்தாப்(5) ஆகிய இருவரும் வியாழக்கிழமை உயிரிழந்தனா். மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட குழந்தை சயலி (4) வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன.
குழந்தைகள் மூவரும் உயிரிழந்த நிலையில், பலத்த தீக்காயமடைந்த தாய் ராஜ்கத்தோம் ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு நகரக் காவல் ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
மேலதிக செய்திகள்
3 யாழ். தீவுகளுக்கு மின்சாரம் வழங்க இந்தியாவிடமிருந்து , 10.995 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
பெங்களூரு குண்டு வெடிப்பு: கண்காணிப்பைத் தீவிரப்படுத்திய தில்லி போலீஸார்!