கேரள மாணவர் மரணம்: பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடை நீக்கம்
கேரளத்தில் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத்தில் பயின்று வந்த மாணவரின் திடீர் மரணம், அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கேரள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக துணைவேந்தரை பணியிடை நீக்கம் செய்து அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உத்தரவிட்டுள்ளார்.
வயநாட்டில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில், இளங்கலை கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு பாடப்பிரிவு இரண்டாம் ஆண்டு மாணவரான சித்தார்த்தன் என்பவர், கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி அன்று தனது விடுதியின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ அமைப்பை சேர்ந்தவர்களால் அவர் அடித்துக் கொல்லப்பட்டதாக அவரது கல்லூரி தோழர்கள் சிலர் கூறியதாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர். இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் புயலை கிளைப்பியுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, தனது மகனின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், இதன்மூலம், எந்த உணவும் வழங்கப்படாமல் அவர் கொடூரமாக தாக்கப்பட்டதை பிரேத பரிசோதனை அறிக்கை காட்டுவதாக உயிரிழந்த மாணவரின் தந்தை வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அதே பல்கலைக்கழகத்தை சேர்ந்த 12 மாணவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டுதல், தவறான கட்டுப்பாடு மற்றும் ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிகளில் தானாக காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக ஐபிசி மற்றும் கேரள ராகிங் தடைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, ஆளுநர் பிறப்பித்துள்ள இடைநீக்க உத்தரவில், வயநாடு கால்நடை பல்கழைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் எம்.ஆர்.சசீந்திரநாத் அளித்த அறிக்கையின் மூலம், மாணவர் மரண விவகாரத்தில் முறையான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ. தரப்பினரே மாணவரை அடித்துக் கொன்றதாக காங்கிரஸ், பா.ஜ.க குற்றம்சாட்டியுள்ளன. இந்த விவகாரம் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.
மேலதிக செய்திகள்
3 யாழ். தீவுகளுக்கு மின்சாரம் வழங்க இந்தியாவிடமிருந்து , 10.995 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
பெங்களூரு குண்டு வெடிப்பு: கண்காணிப்பைத் தீவிரப்படுத்திய தில்லி போலீஸார்!
சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் பலி
சாதி, மதம், மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது… அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை