தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. 43,051 மையங்கள் மூலம் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை ஒழிக்க, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் உ ள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என இன்று 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த மையங்களில் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துவழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் 2 லட்சம் பேர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் எனவும், 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும் எனவும், அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை போலியோ வைரஸில் இருந்து பாதுகாக்க பெற்றோர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலதிக செய்திகள்
சாந்தனின் புகழுடல் இன்று தமிழ் மக்களின் அஞ்சலிக்கு : நாளை எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம்