ஆஜராக தயார்… 8 சம்மன்களுக்கு பிறகு செவி சாய்த்த அரவிந்த் கெஜ்ரிவால்..!
டெல்லி மதுபான கொள்கையில் உள்ள சில தகவல்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டு அதன் மூலம் ஆதாயம் பெற்றதாக அரவிந்த் கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, இந்த கொள்கையை ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, புதிய மதுபான கொள்கையில் ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் சட்டவிரோதப் பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் எம்.பி உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். இதே வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை ஏற்கனவே 7 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 7 முறையும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. தேர்தலுக்கு முன்பாக அமலாக்கத்துறை மூலமாக தன்னை கைது செய்து பிரசாரம் செய்ய விடாமல் தடுக்க பாஜக முயல்வதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறார்.
மற்றொருபுறம், சம்மனுக்கு ஆஜராக மறுப்பதாக கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் அமலக்கத்துறை புகார் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணைக்கு காணொலி வாயிலாக ஆஜரான கெஜ்ரிவால், பட்ஜெட் கூட்டத்தொடர் காரணமாக தன்னால் நேரில் ஆஜராகமுடியாது என்றார். இதையடுத்து, கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வரும் 16 ஆம் தேதி வரை விலக்கு அளித்துள்ளது. 16 ஆம் தேதி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது. இதற்கு, மார்ச் 12 ஆம் தேதிக்கு பிறகு வீடியோ காணொளி மூலம் ஆஜராக தயார் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறைக்கு பதிலளித்துள்ளார்.
மேலும், அமலாக்கத்துறையின் சம்மன் சட்டவிரோதமானது என்ற போதிலும் அதற்கு பதிலளிக்க தயாராக உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இருப்பினும், இன்று(திங்கள்கிழமை) ஆஜராகபோவது இல்லை என்றும், மார்ச் 12 ஆம் தேதிக்குப் பிறகு தேதியை முடிவு செய்து தெரிவித்தால், காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்திகள்
நாட்டை அதிரவைத்த பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம்: மத்திய உள்துறை போட்ட அதிரடி உத்தரவு