நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நீக்கப்படுமாம் – ரில்வின் சில்வா கூறுகின்றார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நிச்சயம் நீக்கப்படும் என்று அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் ஜே.வி.பியின் செயலாளருமான ரில்வின் சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“ஜனாதிபதித் தேர்தலா அல்லது நாடாளுமன்றத் தேர்தலா முதலில் நடத்தப்படும் என்பது எமக்குப் பிரச்சினை கிடையாது. எந்தத் தேர்தல் நடத்தப்பட்டாலும் இந்த ஊழல்மிகு ஆட்சியாளர்களை, அரசியல்வாதிகளை விரட்டியடிப்பற்கும், புதியதொரு ஆட்சியை உருவாக்குவதற்கும் நாட்டு மக்கள் தயாராகவே உள்ளனர்.
தேர்தல் காலம் நெருங்கியுள்ள நிலையில் அதனை இலக்கு வைத்துப் பொருட்கள் விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது. 20 கிலோகிராம் அரிசி வழங்கப் பார்க்கின்றனர். தண்ணீர் மோட்டர் எனப் பழைய விளையாட்டு மீண்டும் அரங்கேற்றப்படுகின்றது.
அரச அதிகாரிகளால் வழங்கக்கூடிய காணி உரித்து பத்திரத்தைக்கூட மக்களை வரவழைத்து ஜனாதிபதி வழங்குகின்றார். இது தேர்தல் பிரசாரமாகும். இந்த மோசடி – பழைய விளையாட்டு மக்கள் மத்தியில் இனியும் எடுபடாது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும். ஜனநாயக முறைமையிலான ஆட்சிக் கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் மக்களின் இறைமை பிரதிபளிக்கப்பட வேண்டும். இதனைச் செய்யக்கூடிய ஒரே கட்சி தேசிய மக்கள் சக்தியாகும்.
ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும். அந்தத் தேர்தல் ஊடாக பலமான அரசு நிறுவப்படும். அதன்பின்னர் புதிய அரசமைப்பு இயற்றப்படும். ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கக்கூடிய வகையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும்.” – என்றார்.