போரா சமூக தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்.
போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி மேதகு சயீதினா முஃத்தல் செய்புதீன் ஸாஹேப் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (03) பிற்பகல் பேஜெட் வீதியிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
போரா சமூகத்தின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்கள் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் வாழ்கின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட கலாநிதி செய்யடினா முஃத்தல் செய்புதீன், இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை பாராட்டினார்.
அத்துடன், பம்பலப்பிட்டி போரா தேவாலயம் தொடர்பில் நடத்தப்படும் போரா மாநாட்டை இவ்வருடம் நடத்துவது தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
கடந்த 04 வருடங்களாக போரா சமூகத்தினர் ஆற்றிய சமய சேவைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அடங்கிய புத்தகமும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
போரா சமூகத்தின் தலைவர்கள் உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.