தேர்வெழுத வந்த மாணவிகள் 3 பேர் மீது ஆசிட் வீச்சு – மங்களூருவில் பரபரப்பு

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் தேர்வெழுத வந்த மாணவிகள் 3 பேர் மீது கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பியூசி தேர்வுகள் நடைபெற்றன. அப்போது கல்லூரி வளாகத்திற்குள் முகமூடியும், தலையில் தொப்பியும் அணிந்து வந்த மர்மநபர், திடீரென ஒரு மாணவியை நோக்கி ஆசிட்டை வீசினார். அந்த மாணவியின் அருகே வந்த இரண்டு மாணவிகள் மீதும் ஆசிட் பட்டதில் அவர்கள் அலறித் துடித்தனர்.
உடனே அவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு மாணவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தப்பி ஓட முயன்ற அந்த இளைஞரை கல்லூரி பணியாளர்கள் சுற்றிவளைத்து பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸார் அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆசிட் வீசிய நபர் கேரளாவின் காசர்கோடைச் சேர்ந்த எம்.பி.ஏ. மாணவன் அபின் என்பது தெரியவந்துள்ளது. ஆசிட் வீச்சு சம்பவத்தில் காயமடைந்த மாணவிகளில் ஒருவரும், இவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் காதல் பிரச்னை காரணமாக ஆசிட் வீச்சு நடந்ததும் தெரியவந்துள்ளது.