ஆபாச வீடியோ சர்ச்சை – தேர்தலில் இருந்து விலகுவதாக பாஜக எம்.பி உபேந்திர சிங் ராவத் அறிவிப்பு
ஆபாச வீடியோ சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. உபேந்திர சிங் ராவத் மக்களவை தேர்தலில் இருந்து விலகியுள்ளார்.
பாரபங்கி தொகுதி எம்.பி.யான உபேந்திர சிங் ராவத்துக்கு அதே பகுதியில் போட்டியிட பாஜக தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்கியது. இந்நிலையில் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் ஆபாச காணொலியில் இருப்பது தான் அல்ல என மறுத்த உபேந்திர சிங், பாரபங்கியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது எதிரிகள் செய்த சூழ்ச்சி என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், ஆபாச வீடியோ போலியானது என போலீசில் புகார் அளித்திருந்த உபேந்திர சிங் ராவத், தற்போது மக்களவை தேர்தலில் இருந்து விலகியுள்ளார். ஏஐ தொழில் நுட்பம் மூலம் தனது உருவத்தை ஆபாச வீடியோவில் இணைத்து அவதூறு செய்துவிட்டனர். தமக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டனர். இதனால் பாரபங்கி லோக்சபா தொகுதியில் தாம் போட்டியிடவில்லை. தேர்தல் அரசியலில் இனி போட்டியிடப் போவதும் இல்லை என உபேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, பாஜகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போஜ்புரி நடிகர் பவன் சிங், வங்கப் பெண்களை இழிவாக பேசியதால் சர்ச்சையில் சிக்கியவர். இதனால் கடும் எதிர்ப்பை சந்தித்த அவர் , மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று அறிவித்தார்.
தற்போது உ.பி. பாராபங்கி வேட்பாளர் உபேந்திர சிங் ராவத், தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பாஜகவில் அறிவிக்கப்பட்ட 195 வேட்பாளர்களில் இதுவரை 2 பேர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றனர்.
மேலதிக செய்திகள்
தேர்வெழுத வந்த மாணவிகள் 3 பேர் மீது ஆசிட் வீச்சு – மங்களூருவில் பரபரப்பு