வன்னிக்கு வாருங்கள்! – நாமலுக்கு சார்ள்ஸ் அழைப்பு
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவை வன்னிக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்.
“பொருத்தமான நபருக்கு பொருத்தமான அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எமது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்” எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போது சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. இந்த அழைப்பை விடுத்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“முல்லைதீவு, மன்னார் மாவட்ட மைதானங்கள் மற்றும் மன்னார் நகர எல்லையிலுள்ள எமில் நகர பொது விளையாட்டு மைதானம் என்பவற்றை நிர்மாணிக்க அமைச்சரின் நேரடிக் கண்காணிப்பின் கீ்ழ் 2021 வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்குமாறு கோருகின்றேன்.
இரு வாரங்களுக்கு முன்னர் நான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தேன். முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதிகளில் எமது மக்களின் விவசாய நிலங்களை மகாவலி அதிகார சபை அதிகாரிகள் விவசாயம் செய்ய விடாமல் தடுத்துள்ளமெய் பற்றி கூறினேன். இதைக் கண்காணிக்க அதிகாரிகளை அனுப்புமாறு கோரினேன். எமது மக்களுக்குத் தமது சொந்த இடத்தில் விவசாயம் செய்ய முடியாதுள்ளது. இது பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக நீங்கள் (நாமல்) வன்னிக்கு வருகை தர வேண்டும்” – என்றார்.