ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும் – நாடு திரும்பிய பஸில் வலியுறுத்து.
ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராபஜபக்ஷ தெரிவித்தார்.
அமெரிக்கா சென்றிருந்த பஸில் ராஜபக்ஷ நாடு திரும்பிய வேவளையில் இதனைக் கூறினார்.
நாடாளுமன்றத்தைக் கலைத்தால் தான் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வர எண்ணம் இல்லை என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்தால் தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவிலுள்ள தனது பிள்ளைகளுடன் விடுமுறையைச் செலவிட்ட அவர், சுமார் இரண்டு மாதங்கள் அங்கு தங்கியிருந்த நிலையில் இன்று நாடு திரும்பினார்.
எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான 650 இலக்க விமானத்தில் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
தாம் வழக்கமாக, பிள்ளைகளுடன் தங்குவதற்காக டிசம்பர் மாதம் அமெரிக்கா செல்வதாகவும், ஓரிரு மாதங்கள் அவர்களுடன் அங்கு தங்கியிருந்த பின்னர் தற்போது நாடு திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரவுள்ளது நாடாளுமன்றத் தேர்தல்தான் எனவும், அந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகளை ஸ்திரப்படுத்துவதற்காகவே பஸில் ராஜபக்ஷ நாட்டுக்கு வரவுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்திருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பஸில் ராஜபக்ஷ, எந்தவொரு தேர்தல் வந்தாலும் தாம் அதற்கான ஒழுங்குகளைச் செய்வேன் என்றும், ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
யார் ஜனாதிபதியாக வந்தாலும் அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவுடன்தான் வருவார் என்றும் அவர் கூறினார்.
‘மொட்டுக் கட்சி பலமாக உள்ளதா?’ – என்ற கேள்விக்கு, “ஆம் அதனால்தானே நாம் கடந்த 3 தேர்தல்களையும் வென்றிருந்தோம்.” – என்று அவர் பதிலளித்தார்.
‘தற்போது மொட்டுக் கட்சி பல கூறுகளாகப் பிரிந்துள்ளதே?’ – என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, “அரசியல் என்றால் பிரிவதும் பின்னர் சேர்வதும் சகஜம்தான்” – என்று குறிப்பிட்டார்.
‘நீங்கள் மீண்டும் மக்களை ஏமாற்ற முயற்சி செய்கிறீர்களா?’ – என்ற கேள்விக்கு, “இல்லை. நாம் ஒருபோதும் மக்களை ஏமாற்ற முயற்சிக்கவில்லை. மக்கள் சொல்வதைத்தான் நாம் மேற்கொள்கின்றோம். ஒரு சில வேளைகளில் எமது முடிவுகள் பிழைத்துப் போயுள்ளன. மக்கள் நாம் சொல்வதை ஏற்பதில்லை. சில வேளைகளில் மக்கள் சொல்வதை நாம் கேட்பதில்லை போன்ற சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.” – என்று அவர் பதிலளித்தார்.
‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிர்வரும் தேர்தல் சவாலானது என நீங்கள் ஏற்கின்றீர்களா?” – என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, “ஆம். எப்போதும் அனைத்து தேர்தல்களும் சவாலானதுதான்.” – என்று தெரிவித்தார்.
‘ஜனாதிபதித் தேர்தலில், மொட்டுக் கட்சி வேட்பாளரை நிறுத்துமா? வேட்பாளர் ஒருவருக்குத் தனது ஆதரவை மொட்டுக் கட்சி வழங்குமா?’ – என்ற கேள்விக்கு, “அது தொடர்பில் நாம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. எமது அரசியல் சபை கூடி, எமது தலைவரினதும், தொண்டர்களினதும் ஆலோசனைகளைப் பெற்று எதிர்வரும் சில நாட்களில் நாம் முடிவெடுப்போம். கலக்கமடைய வேண்டியதில்லை.” – என்று அவர் பதிலளித்தார்.
‘எதிர்வரும் தேர்தலில் ராஜபக்ஷ ஒருவரா போட்டியிடுவார்?’ – என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, “அதுவும் மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அது அவ்வாறு அமையும் என்று நாம் நம்பவில்லை.” – என்று கூறினார்.