ராஜீவ் கொலையில் விடுவிக்கப்பட்டுள்ள எஞ்சிய மூவரையும் ,உடனே இலங்கைக்கு அனுப்புங்கள் : தமிழக அரசு மனு தாக்கல்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையுடன் தொடர்புடைய எஞ்சிய 3 இலங்கையர்களையும் உடனடியாக இலங்கைக்கு அனுப்ப உத்தரவிடுமாறு கோரி, தமிழக அரசு நேற்று (4) நீதிமன்றத்தில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளது.
7 பேருக்கு எதிராக கொலைக் குற்றம் சாட்டப்பட்டு , ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் சோனியா காந்தி மற்றும் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த பலர் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கக் கோரியதைத் தொடர்ந்து அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் அவர்களில் 4 பேரையும் தமிழகத்தின் திருச்சி பகுதியில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைத்து ஏனைய மூவரையும் தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு அனுப்ப தமிழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன், தாயாரைப் பார்க்க யாழ்ப்பாணம் செல்வதை , தமிழக அரசு இழுத்தடித்தமையால் , அவர் திடீரென உயிரிழந்தார். அதன்பின்னர் , இந்த மரணம் தொடர்பாக தமிழக அதிகாரிகள் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட சாந்தனை அனுப்பாமை தொடர்பில் , ஏற்பட்டுள்ள நிலை காரணமாக , விடுவிக்கப்பட்டும் , திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சிய 3 இலங்கையர்களான ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் மற்றும் முருகன் ஆகியோரை உடனடியாக இலங்கைக்கு அனுப்ப, நீதிமன்றத்தை உத்தரவிடக்கோரி தமிழக அரசு ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது.
கடந்தவை குறித்து ஒரு பார்வை
1998 செப்டம்பர் முதல் 1999 ஜனவரி வரை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. கே.டி. தாமஸ், டி.பி. வாத்வா, சையத் ஷா முகமது கத்ரி ஆகியோர் விசாரித்தனர். மே 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டும் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தடா சட்டப்படி குற்றம்சாட்டப்பட்ட சண்முக வடிவேலு குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். மற்ற 18 பேரும் குற்றம் சாட்டப்பட்டதைவிட தீவிரம் குறைந்த குற்றங்களையே புரிந்ததாக நீதிமன்றம் கூறியது. அவர்கள் அதுவரை சிறையில் இருந்த காலத்தையே தண்டனைக் காலமாகக் கருதி விடுதலைசெய்யப்பட்டனர்.
2014 பிப்ரவரி 18: பல ஆண்டு காலம் மூவரது கருணை மனுக்களும் எந்தக் காரணமுமின்றி நிலுவையில் இருந்ததால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனை ரத்துசெய்யப்படுவதாக சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.
2014 பிப்ரவரி 19: தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி, வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரித்திருந்தால் மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டுமென கூறப்படுவதால் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தவதாகவும் மூன்று நாட்களில் 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் ஜெயலலிதா கூறினார்.
2018 செப்டம்பர் 9: சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.
2021 மே 20: தமிழ்நாடு அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
2022 மே 18: இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த ஏ.ஜி.பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். 2018ம் இந்த 7 பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரையின் மீது செயல்பட ஆளுநர் காலவரம்பற்ற தாமதம் செய்த நிலையில், உச்ச நீதிமன்றம் தமக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பில் கூறியிருந்தது.
2022 நவம்பர் 11: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதன் அடிப்படையில் தங்களுக்கும் விடுதலை வழங்கவேண்டும் என்று கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவர்கள் இருவரை மட்டும் இல்லாமல் வழக்கில் சிறையில் இருக்கும் 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் இந்தியக் குடிமக்கள் என்பதால் அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். முருகன், ஜெயக்குமார், சாந்தன், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை குடிமக்கள் என்பதால் அவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.
தங்களுக்கு தற்காலிக பயண ஆவணங்களை வழங்கி, தங்களை விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப வேண்டுமென நால்வரும் கோரிவந்தனர்.
32 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தனுக்கு பல உடல்நல பிரச்சனைகள் இருந்தன. குறிப்பாக கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
ஆனால், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடையவே, அவர் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், இன்று காலையில் அவருக்கு இதயத் துடிப்பு முடக்கம் ஏற்பட்டு, உயிரிழந்தார்.