சிறுமி பாலியல் வன்கொடுமை கொலைக்கு கண்டனம் – புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு
கடந்த 2 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு தவறான எண்ணத்துடன் சிறுமியை அழைத்துச் சென்ற 19 வயது இளைஞரான கருணாஸ், விவேகானந்தனின் வீட்டின் பின்புறம் வைக்கோல்போர் அருகே வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த 57 வயதான விவேகானந்தன், கருணாஸை விரட்டிவிட்டு, சிறுமியின் கை, கால்களை கட்டி, வாயை மூடி தானும் பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதில் சிறுமி மூச்சு திணறி உயிரிழந்த நிலையில், விவேகானந்தனும் கருணாஸூம் இணைந்து சிறுமியின் உடலை வேட்டியில் கட்டி, அன்றைய தினமே வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட விவேகானந்தன் மற்றும் கருணாஸ் ஆகியோருக்கு மருத்துவ பரிசோதனையை முடித்த பின்னர், புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த காவல்துறையினர் திட்டமிட்டனர். ஆனால், அங்கு ஏராளமான வழக்கறிஞர்கள் குவிந்திருந்ததால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதனால், நீதிபதியிடம் சிறப்பு அனுமதி பெற்ற காவல்துறையினர், 2 பேரையும் காலாப்பட்டு மத்திய சிறைக்கு நேரடியாக அழைத்துச் சென்றனர். இதையடுத்து, மூன்றாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இளவரசன் நீதிமன்றத்தில் இருந்து சிறை வளாகத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர், இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சிறுமி கொலை வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள கலைவாணன் தலைமையிலான சிறப்புக்குழு, சிறுமியின் அண்டை வீட்டாரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சிறுமி கொலை வழக்கில் அலட்சியமாக இருந்த முத்தியால்பேட்டை காவல் நிலையத்தின் ஆய்வாளர் தனசெல்வம், உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன் மற்றும் காவலர்கள் 11 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சுவாதி சிங் போக்குவரத்துப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனிடையே, சிறுமி கொலைக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி , திமுக அமைப்பாளர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக சார்பில் தனித்தனியாக இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக வழக்கறிஞர்களும் அறிவித்துள்ளனர். தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வணிக வளாகங்கள் இயங்காது எனவும், கடைகள் அடைக்கப்படும் எனவும் அந்தந்த சங்கங்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு அடைப்பு காரணமாக, புதுச்சேரியில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல, இன்று நண்பகல் மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக செய்திகள்