யாழ்.மாவட்டங்களில் 109 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன!
யுத்த காலத்தில் இராணுவத்தினரால் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பராமரித்து வந்த கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள 109 ஏக்கர் காணிகளை விடுவிக்கும் நிகழ்வு இன்று (10) யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான சாகல ரத்நாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு காணி உரிமையாளர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமரட்ன, அதிபர் செயலக வட மாகாண இணைப்பாளர் எல்.இளங்கோவன், முன்னாள் அரசாங்க அதிபர்கள் பாதுகாப்பு படையினர், கடற்படையினர், பிரதேச செயலாளர்கள் மற்றும் அதிபர் செயலக உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய சாகல ரத்நாயக்க, 1985ஆம் ஆண்டு வடக்கில் காணியில் உரிமை பெற்ற அசல் உரிமையாளர்களின் காணிகள் எக்காரணம் கொண்டும் கையகப்படுத்தப்பட்டிருந்தால் அவர்கள் விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.
இந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் பெருமளவிலான காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்த சாகல ரத்நாயக்க, இந்த விடயத்தில் இராணுவத்தினரும் ஏனைய அரச அதிகாரிகளும் காட்டும் அக்கறையை பாராட்டினார்.