துஷ்டனாக வாழ்ந்த கோட்டா துரத்தப்பட்டமை தண்டனை! – அது சதி அல்ல என்கிறார் விக்கி.
“போர்க் காலத்தின் போதும், அரசியலில் ஈடுபட்ட காலத்தின் போதும் கோட்டாபய ராஜபக்ஷ துஷ்டனாகவே வாழ்ந்து வந்துள்ளார். துஷ்டர் ஒருவரை சிங்கள இளைஞர், யுவதிகள் பதவியில் இருந்து நீக்கினார்கள் என்பதுதான் உண்மை. அது சதி அல்ல. தண்டனை. அடித்துத் துரத்தப்பட வேண்டிய ஒருவர் என்று சிங்கள மக்களால் அடையாளம் காணப்பட்ட ஒருவரே அவர்களால் விரட்டப்பட்டார்.”
இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்.
‘வாரத்துக்கொரு கேள்வி’ என்ற தமது பதிவில் நேற்றுத் தாம் வெளியிட்ட செய்திக் குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
அந்தக் கேள்வி – பதில் விவரம் வருமாறு:-
கேள்வி:- வெளிநாட்டு – உள்நாட்டு சதியின் விளைவே தாம் பதவியிலிருந்து நீங்கியமை என்று முன்னைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறுகின்றாரே! உங்கள் கருத்து என்ன?
பதில்:- துஷ்டர்களைக் கண்டால் தூர விலகுவது நாம் காலம் காலமாக செய்து வரும் ஒரு செய்கையாகும். போர்க் காலத்தின் போதும் அரசியலில் ஈடுபட்ட காலத்தின் போதும் கோட்டாபய துஷ்டனாகவே வாழ்ந்து வந்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்ட போது, இராணுவ சிங்கள நண்பர்களுடன் எம்மவர் சிலர் பேச நேர்ந்தது. அவர்கள் கூறிய கூற்று அந்த காலகட்டத்தில் எனக்கு பாரிய அதிர்ச்சியைத் தந்தது. அரசின் கோரிக்கையின் பேரில் வெள்ளைக் கொடிகளைக் கையில் ஏந்தி சரணடைந்த தமிழ் மக்களை என்ன செய்ய வேண்டும் என்று முல்லைத்தீவு படையணியினர் வினவிய போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய சற்றும் சிந்தியாது ‘அவர்கள் யாவரையும் சுட்டுக் கொன்றுவிடுங்கள்’ என்று கட்டளை இட்டார் என்று அந்த இராணுவ அதிகாரிகள் கூறினர்.
இராணுவத்தினர் கைவசம் அன்று இருந்த பல இடங்களில் இன்று இறந்தவர்களின் மனித எலும்புகளும் எலும்புக்கூடுகளும் நிலத்திலிருந்து வெளிவருகின்றன. உண்மையான சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற்றால் சரணாகதி அடைந்தவர்கள் எவ்வாறு, யாரின் கட்டளைக்கமைய காணாமல் போனார்கள் என்ற விடயம் வெளிவந்துவிடும்.
தமது வீழ்ச்சிக்குத் தமிழர்களையும் முஸ்லிம் மக்களையும் மறைமுகமாகக் குற்றஞ்சாட்டும் கோட்டாபய ‘அறகலய’வில் பங்கு பற்றியோர் 99 சதவிகிதமானோர் சிங்கள இளைஞர்களே என்பதை மறந்துவிடக்கூடாது.
உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு நடைபெற முன், எவ்வளவு காலமாக, யாருடன் கூட்டு சேர்ந்து குறித்த சம்பவம் நடைபெற பதவியில் இருந்த சிலர் பிரயத்தனங்களில் ஈடுபட்டனர் என்பது ஒரு சர்வதேச விசாரணை நடந்தால் வெளிவந்துவிடும். இந்தச் சம்பவத்தால் அரசியல் இலாபம் பெற்ற சிங்கள நபர் யார் என்பதை விசாரணை எளிதாகக் காட்டிக் கொடுத்துவிடும். சர்வதேச விசாரணைகள் இங்கு நடைபெறக்கூடாது என்று இன்று பதவியில் உள்ளவர்கள் கூறுவது உண்மைகள் வெளிவந்துவிடாது தடுப்பதற்கே.
என் நண்பர் சட்டத்தரணியும் பத்திரிகையாளருமான லசந்த விக்கிரமதுங்க எவ்வாறு, ஏன் கொலை செய்யப்பட்டார், பின்னணியில் இருந்தவர்கள் யார் என்று சர்வதேச விசாரணை நடந்தால் எளிதில் கண்டுபிடித்துவிடுவார்கள். கோட்டாபயவின் பங்கு என்ன என்பதையும் சர்வதேச விசாரணை காட்டிக் கொடுத்துவிடும். வெளிநாட்டவர்கள் மற்றும் உள்நாட்டவர்கள் தமக்கெதிராகச் சதி செய்தார்களா என்பதை கோட்டாபய தன்னிடமே விசுவாசத்துடன் கேட்டால் தன் செயல்களே தனது வீழ்ச்சிக்குக் காரணம் என்பதைப் புரிந்து கொள்வார்.
ஆனால் ‘அறகலய’ இளைஞர்,யுவதிகளை கிளர்ந்தெழச் செய்தது கோட்டாபயவின் முட்டாள்தனமான பொருளாதார நடவடிக்கைகளே. அதிகாரம் இருந்தால் எவர் அறிவுரையையும் பொருட்படுத்தாமல் முட்டாள்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று உலகுக்கு எடுத்துக் காட்டியவர் கோட்டாபயவே.
இரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை உரத்தை எமது விவசாயிகள் பாவிக்க வேண்டும் என்பதில் எவரிடத்திலும் இரண்டாவது கருத்து ஒன்று இருக்கமுடியாது. ஆனால் சரியோ, பிழையோ செயற்கை உரங்களை நம்பியே விவசாயிகள் அண்மைக் காலங்களில் விவசாயம் செய்து வந்துள்ளார்கள். ஆகவே திடீரென செயற்கை உரத்தை வெளிநாட்டில் இருந்து வருவிப்பதைத் தடுத்தால் என்ன நடக்கும் என்று அவர் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும். சிந்தித்திருந்தால் வரும் இரண்டு அல்லது மூன்று வருடங்களின் பின் செயற்கை உரங்களை வருவிப்பதை நீக்க இருக்கின்றோம், அவற்றுக்குப் பதில் பலமான இயற்கை உரங்களை உருவாக்க இப்பொழுதிருந்தே ஆயத்தமாகுங்கள் என்று கூறியிருப்பார்.
மண்புழு உரம், சாணி உரம், காய்ந்த சருகு உரம் என்று பல விதமான இயற்கை உரங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பயிர்கள் கூடிய அறுவடையைத் தர எவ்வாறு, என்னவாறான இயற்கை உரங்கள் இனிப் பாவிக்கப்பட வேண்டும் என்று ஆராய்ந்து அவற்றை பெருவாரியாக உள்நாட்டில் தயாரிக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் போதிய அறிவிப்புடன் செயற்கை உரங்கள் வருவிப்பதை நிறுத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாது சிங்கள மக்களின் வயிற்றில் அடித்துவிட்டு சிறுபான்மையினரின் சதியே தமது வெளியேற்றம் என்று கூறுவது சிறுபிள்ளைத் தனமாகும்.
தனக்குத் தேர்தலில் உதவி புரிந்த பணக்காரக் குடும்பங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கும் வண்ணம் தமது நிதிக் கொள்கைகளை மாற்றியமை சிங்கள மக்களிடையே பலத்த வெறுப்பை ஏற்படுத்தியது. இவை சாதாரண சிங்களக் குடும்பங்களில் இருந்தவர்களுக்கு வெறுப்பையும் கோபத்தையும் உண்டாக்கின.
தமது வயிற்றில் அடிக்கப்பட்டதால் சிங்கள இளைஞர்கள் கோட்டாபயவுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்ததற்காக சிறுபான்மையினர் மீதும் வெளிநாட்டவர்கள் மீதும் சேறு பூசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அடித்துத் துரத்தப்பட வேண்டிய ஒருவர் என்று சிங்கள மக்களால் அடையாளம் காணப்பட்ட ஒருவரே அவர்களால் விரட்டப்பட்டார்.
அவரின் குடும்பத்துக்குள்ளேயே சதிகாரர்கள் சிலர் இருந்திருக்கக்கூடும். அதனை அவர் ஆராய்ந்து பார்த்து தமது குடும்ப அங்கத்தவருடன் பேச வேண்டும். அதை விட்டு விட்டு ‘செல்லும் செல்லாததற்கு செட்டியார் இருக்கின்றார்’ என்பது போன்று சிறுபான்மையினர் மீது சதிப் பழி போடுவது ஒரு ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஒருவருக்கு அழகல்ல.
துஷ்டர் ஒருவரை சிங்கள இளைஞர், யுவதிகள் பதவியில் இருந்து நீக்கினார்கள் என்பதுதான் உண்மை. அது சதி அல்ல. தண்டனை. மனிதப் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு நிறுத்தப்படுவது அவரின் இந்த நூல் தடுக்கும் என்று கோட்டாபய நினைத்தாரானால் மனோ கணேசன் கூறியமை போல் அவரைப் போல் வடிகட்டின முட்டாள் ஒருவர் இந்நாட்டில் இருக்க முடியாது.
இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 400 கிலோ கஞ்சா தமிழகத்தில் சிக்கியது!
பதவி ஆசை எனக்கு இல்லை; பதவி என்னைத் தேடி வந்தது! – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு.