திலீபன் நினைவேந்தல் தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு
திலீபன் நினைவேந்தல் தடை
மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு
– யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளை
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 14 நாட்களுக்கு நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது.
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவரை அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளிக்க நீதிமன்றத்தால் முடியாது என்று கட்டளையிடப்பட்டது.
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத் தூபியில் நினைவேந்தல் நடத்தக் கோரிய மனுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட், யாழ். மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்தீபன், முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சட்டத்தரணிகளான வி.மணிவண்ணன், க.சுகாஷ், அரசியல் செயற்பாட்டாளர் க.விஸ்ணுகாந்த், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் வாசுகி சுதாகரன், தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த பிருந்தாபன் உள்ளிட்ட 20 பேரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டன.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஊடாக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக் கோவை 106ஆம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை ஏற்படும் என்று பொலிஸாரால் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் கடந்த 14ஆம் திகதி அழைக்கப்பட்டது.
பொலிஸாரின் விண்ணப்பம் மன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைவிதித்து உத்தரவிடப்பட்டது.
அத்தோடு வழக்கு செப்டெம்பர் 21ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் இந்த வழக்கில் பிரதிவாதிகள் 20 பேரையும் மன்றில் முன்னிலையாக அழைப்புக் கட்டளை வழங்கியிருந்தது.
அதனடிப்படையில் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் கடந்த 21ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்போது யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ.ஆனோல்ட் சார்பில் சட்டத்தரணி கணதீபன் முன்னிலையாகியிருந்தார். அத்துடன், மூத்த சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, வி.திருக்குமரன் மற்றும் சட்டத்தரணி சுகாஷ் ஆகியோர் இலங்கை குற்றவியல் நடைபடி சட்டக்கோவையின் 106 பிரிவின் 4ஆம் உப பிரிவின் கீழ் இந்த வழக்கைப் பொலிஸார் தாக்கல் செய்தமை தவறு என்று சட்ட ஏற்பாடுகள், முற்தீர்ப்புகளை வைத்து நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்திருந்தனர். அதனால் வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் மன்றுரைத்திருந்தனர்.
ஆனால், தியாக தீபம் திலீபன், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என நிரூபிக்க அவரது வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமர்ப்பணம் செய்திருந்தார்.
இரு தரப்பு சமர்ப்பணங்களை ஆராய்ந்த மன்று, கட்டளை 24ஆம் திகதி (இன்று) வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.
இன்றும் இரு தரப்பு வாதங்களை ஆராய்ந்த நீதிமன்றம், தடையுத்தரவை மேலும் நீடித்துள்ளது.
“மன்றினால் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்படுகின்றது. அதனை மேலும் நீடிக்க வேண்டுமாயின் சட்டம் – ஒழுங்கு அமைச்சு (உள்ளகப் பாதுகாப்பு) வர்த்தமானி மூலம் அறிவிக்கவேண்டும். அதனால் இந்த வழக்கு முடிவுக்குக் கொண்டுவரப்படுகின்றது” – என்று நீதிவான் உத்தரவிட்டார்.