உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும் : விக்னேஸ்வரன்

எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும் எனத் தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் சபையில் இன்று தெரிவித்தார்.

அவர் ஆற்றிய உரையின் முழு வடிவம் வருமாறு:-

நிதி ஆணைக்குழுவின் அறிக்கை பரிசீலிக்கப்படும் போது மாகாண சபைக்கு உரியதான சில விடயங்கள் உங்கள் யாவரதும் கவனத்தில் நிலை நிறுத்தப்பட வேண்டியுள்ளது. அரசியல் யாப்பின் உறுப்புரை 154 R(3)ன் கீழ் மாகாணங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிதி ஆணைக்குழுவின் சிபார்சின் பேரில் நிதி மாகாணத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அது நடப்பதில்லை. நான் வடமாகாண முதலமைச்சராக இருந்த போது எமது கணிப்பின் அடிப்படையில் 12000 மில்லியன் நிதி 2014ம் ஆண்டு மாகாண செலவுகளுக்காக வேண்டியிருந்தது. எவ்வெவற்றிற்காக அந்தப் பணம் தேவையாக இருந்தது என்பது பற்றி நாம் விலாவாரியாகக் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் எமக்குக் கிடைத்ததோ கிட்டத்தட்ட 1650 மில்லியன் மட்டுமே. அந்தத் தொகையை மிகக் கவனமாக நாம் ஒரு சதமேனும் வீணாக்காது செலவு செய்தோம். ஆனால் அதே பாதீட்டின் மூலம் அரசாங்கம் சுமார் பத்தாயிரம் மில்லியன் பணத்தை வெவ்வேறு மத்திய அமைச்சர்களுக்கு ஒதுக்கியிருந்தது. அவ்வாறு நிதி ஒதுக்கப்பட்டு பலவித தடைகளைத் தாண்டி வடமாகாண அரசாங்க அதிபருக்கு அந்த நிதி வந்த போது வருடத்தின் பாதிக் காலத்திற்கு மேல் முடிந்திருந்தது. அரசாங்க அதிபர்கள் அதாவது மாவட்ட செயலாளர்கள் அந்தப் பணத்தை மக்கள் சார்பாக நேரம்மின்மையால் பாவிக்க முடியாததின் காரணமாக பெரும்பான்மைப் பணம் திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால் எமக்குத் தரப்பட்ட 1650 மில்லியன் பணமோ உரியவாறு ஒரு சதம் மிச்சமில்லாமல் செலவு செய்யப்பட்டது. அவ்வாறு சிறந்த முறையில் நிதி நிர்வாகம் நடந்ததால்த் தான் 2016ம் ஆண்டில் நாட்டின் 850க்கும் மேலான அமைச்சுக்கள், திணைக்களங்கள் அனைத்தினுள்ளும் முதலாவதாக எமது வடமாகாண முதலமைச்சரின் அமைச்சு பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆகவே பணத்தைத் திருப்பி அனுப்பியவர்கள் மாவட்ட செயலர்களேயன்றி நாமல்ல.

ஆனால் அரசாங்கம் சொல்லித் திரிந்தது என்ன? வடக்கு மாகாணசபை பணத்தைத் திருப்பி அனுப்பி விட்டது என்று வாய் கூசாமல் பொய் கூறினார்கள். வடக்கு மாகாணசபை வேறு வடக்கு மாகாணம் வேறு. அவை வெவ்வேறு நிர்வாகத் தலைமைத்துவங்களின் கீழ் கடமையாற்றுகின்றார்கள் என்பதைத் தெரிந்தும் தமது அமைச்சர்களினதும் தமதும் குற்றங்களை மறைக்க எம்மீது பழி சுமத்தினார்கள்.

நான் என்ன கூறவருகின்றேன் என்றால் உறுப்புரை 154 R(3) ஆனது மாகாண தேவைகளைப் பூர்த்தி செய்ய பணத்தை மாகாணங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறுகின்றது. அதை விட்டு மத்திய அமைச்சர்களுக்குப் பெருவாரியான பணத்தைப் பெற்றுக்கொடுப்பது எதற்காக? பின்னர் நீங்கள் மாகாணசபைகள் எதுவுமே செய்யவில்லைஇ பணத்தைத்திருப்பி அனுப்பி விட்டார்கள் என்று அப்பட்டமான பொய் கூறி ஒப்பாரி வைப்பதன் காரணம் என்ன?

உண்மையில் சட்டப்படி மத்திய அமைச்சர்களுக்கு மாகாணம் சார்பாக கொடுக்கும் பணம் அனைத்தும் மாகாண சபைகளுக்கே கையளிக்கப்பட வேண்டும். மாகாணங்களை நிர்வகிக்க வேண்டியது மாகாணத்தவரே அன்றி மத்திய அரசாங்கத்தினர் அல்ல.

வலுக்குறைந்த 13வது திருத்தச் சட்டத்தை மேலும் வலுவற்றதாகச் சித்தரிக்கவே இவ்வாறு தொடர்ந்து வந்த மத்திய அரசாங்கங்கள் நடந்து கொண்டு வந்திருக்கின்றன என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நிதி ஆணைக்குழு இதுபற்றி ஆராய்ந்து உரிய நடவடிக்கை எதிர்காலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்.

அடுத்து அண்மையகால சில விடயங்கள் பற்றி இங்கு பேச வேண்டியுள்ளது.

முதலாவது எமது மக்களின் உரிமைகளுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமையாகும். சென்ற அரசாங்கம் இவ்வாறான அஞ்சலிகளைக் கண்டும் காணாதது போல் இருந்ததால்த்தான் இம்முறை மத்தியில் இருக்கும் ஒரு தேசியக் கட்சிக்கு மக்களின் வாக்குகள் கிடைத்தன. அடுத்த முறை மத்திய தேசியக் கட்சிகளை மக்கள் வெறுத்தொதுக்குவதற்காகத்தான் இவ்வாறு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றதோ நான் அறியேன். அடுத்த முறை கையூட்டுகள் இரட்டிப்பாகக் கிடைத்தாலும் மக்கள் மத்திய தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

(இப் பந்தி வரையில் தான் விக்னேஸ்வரன் அவர்களால் பாராளுமன்றத்தில் உரையாற்ற முடிந்தது. நேரம் போதாமையால் மிகுதியை ஹன்சாட்டில் உள்ளவாங்குவதற்கு அனுமதி பெறப்பட்டது)

எமது மக்களின் நியாயமான உரிமைகளை வலியுறுத்தியே தியாகி திலீபன் 30 ஆண்டுகளுக்கு முன்னர் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதம் இருந்து மடிந்த ஒருவரைக் கூட நினைத்து அஞ்சலி செலுத்தக் கூடாது என்று அரசாங்கம் தடை விதித்திருக்கின்றது என்றால் ஆயுதமேந்தி மடிந்தவர்களை நினைத்து அஞ்சலி செலுத்தலாம் என்று நினைக்கின்றதா? இரண்டுமே வேண்டாமென்றால் அரசாங்கம் கூறவருவது எதனை? அஹிம்சை முறையிலேயோ ஹிம்சை முறையிலேயோ தமிழ் மக்கள் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கக் கூடாது என்பதைத் தானே? மக்கள் தமது நியாயமான உரிமைகளைப் பெற எத்தனிக்கக் கூடாது என்பதைத் தானே அரசாங்கம் சொல்ல வருகின்றது? இப்பொழுதே இப்படி என்றால் 20வது திருத்தச் சட்டம் நிறைவேறினால் என்ன நடக்கப் போகின்றது என்பதை இலங்கை மக்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அடுத்து திலீபனின் அன்றைய நியாயமான கோரிக்கைகள் இன்று வரையில் நிறைவேற்றப்படவில்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். வடக்குக் கிழக்கில் திட்டமிட்ட அரச குடியேற்றங்கள் இன்றும் நடைபெற்று வருகின்றன. தமிழ் அரசியற் கைதிகளுக்கு இன்றும் விமோசனம் கிடைக்காதிருக்கின்றது. பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. தமிழர் பிரதேசங்களில் புதிய பொலிஸ் நிலையங்களைத் திறந்து அங்கு தமிழ் பேசாதவர்களைப் பதவியில் இருத்துவது இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது.

அன்று அவர் எதற்காக ஒரு துளி நீர் கூட அருந்தாமல் 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்து மடிந்தாரோ அதே கோரிக்கைகள் 30 வருடங்கள் கடந்த நிலையிலும் இன்றும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அரசாங்கம் தொடர்ந்தும் எம் மக்களைப் பயங்கரவாதிகளாகவே சித்திரிக்கப்பார்க்கின்றார்கள். ஆனால் நாம் செய்யும் அனைத்துச் செயல்களும் உலக அரசாங்கங்களினாலும் ஐ.நா. சபையாலும் கவனமாக உற்று நோக்கப்பட்டே வருகின்றன என்பதை அரசாங்கம் மறக்கக் கூடாது. கலாநிதி பச்சலட் அவர்களின் அண்மைய கூற்று இதனை வெளிப்படுத்துகின்றது. அடக்கு முறைகளின் மூலம் எமது மக்களின் உணர்வுகளை அடக்குவது இந்த நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்குக் குந்தகமாகவே அமையும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஆகவே தயவு செய்து எதிர்வரும் 26ந் திகதி எமது மக்கள் தியாகி திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு ஏற்படுத்தியுள்ள தடைகள் அனைத்தையும் நீக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

மூன்றாவதாக திலீபன் தொடர்பாக எமது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா அவர்கள் கருத்துக்களைத் தெரிவிக்காது இருத்தல் நலமென்றே நினைக்கின்றேன். முன்னர் எப்போதும் இல்லாத வகையில் தமிழ் மக்களின் போராட்டமும் வரலாறும் தமிழ் மக்களினாலேயே கொச்சபை;படுத்தப்படும் புதிய நிகழ்ச்சித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சர் தேவானந்தா பாவிக்கப்படுகின்றார் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

எதற்காக திலீபன் சம்பந்தமாக கௌரவ அமைச்சர் தேவானந்தா அவர்கள் முறையற்ற விமர்சனங்களில் ஈடுபட்டு வருகின்றார் என்பது எமக்குப் புரியவில்லை. சூளை மேட்டுக் கொலை பற்றியோ ஊர்காவற்றுறை, நெடுந்தீவு போன்ற தீவுப்பகுதிகளில் அவரின் கட்சி இயற்றிய அட்டகாசச் செயற்பாடுகள் பற்றியோ, மகேஸ்வரன் கொலை பற்றியோ, அற்புதன், நிமலராஜன் போன்ற பத்திரிகையாளர்கள் கொலை பற்றியோ எவரும் கூறாதிருக்க ஏன் திலீபன் பற்றியும் என்னைப் பற்றியும் மிகுந்த கரிசனை காட்டுகின்றார் அவர் என்பது புரியவில்லை.

அத்துடன் மாகாணசபையின் அதிகாரங்கள் தொடர்பில் பொருத்தம் அற்றதும் விளக்கமற்றதுமான கருத்துக்களைக் கூறுவதையும் அமைச்சர் டக்ளஸ் அவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கூலிக்கு மாரடிப்பவர்களுக்கு எமது மக்களுக்கான உரிமைகள் பற்றியோ, தேவையான அதிகாரங்கள் பற்றியோ என்ன விளங்கப் போகின்றது? கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்று கேட்டு எனது பேச்சை இத்துடன் நிறைவு செய்கின்றேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.