தியாகி திலீபன் நினைவேந்தல்:கஜேந்திரகுமாரின் கூற்றுக்கு சபாநாயகர் அனுமதி மறுப்பு
ஆளும் – எதிர்க்கட்சிகள் தர்க்கம்
தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை அனுமதிக்கக் கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் சபையில் இன்று வாசிக்க இருந்த விசேட கூற்றுக்கு சபாநாயகரால் அனுமதி மறுக்கப்பட்டது.
திலீபனை நினைவுகூர்வதற்கு அரசு பொலிஸார் ஊடாக தடை விதித்திருப்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் உரிமையை மறுக்கும் செயல் எனச் சுட்டிக்காட்டி, குறித்த நினைவேந்தலை அனுமதிக்க வேண்டும் என்று கஜேந்திரகுமார் கோர இருந்தார்.
இதனை வலியுறுத்தும் விதத்தில் நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படுவதற்காக எழுத்து மூலமான கூற்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் நேற்று (23) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இன்று (24) அது குறித்து சபையில் அறிவித்த சபாநாயகர், நீதிமன்றத்தில் காணப்படும் வழக்குடன் தொடர்புடைய விடயம் என்பதால் குறித்த கூற்று நிராகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதையடுத்து சபையில் குழப்பங்கள் ஏற்பட்டன.
கட்சித் தலைவர் என்ற வகையில் கஜேந்திரகுமாரின் உரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் ஒன்றுதிரண்டு வலியுறுத்தினர். சபாநாயகர் சபையை தவறாக வழிநடத்தி சர்வாதிகாரியாக நடந்துகொள்கின்றார் என்றும் எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பவற்றின் முக்கியஸ்தர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். ஆனால், சபாநாயகரின் தீர்ப்பே இறுதியானது என ஆளும் கட்சியினர் வாதம் செய்தனர். சபாநாயகரும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார். இதனால் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக சபை அமளி துமளிப்பட்டது.
கஜேந்திரகுமாரின் உரிமை தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வராமலேயே முடிந்தது.