சர்வதேச சட்டத்தை புறக்கணித்ததால் இலங்கை பல பில்லியன்களை இழக்கிறது

நியு டயமன்ட் கப்பலின் அணைக்க இந்தியாவும் இலங்கையும் தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும், இலங்கை அதிகாரிகளின் அறியாமை மற்றும் சர்வதேச சட்டத்தை பின்பற்றாததால் நாடு பல பில்லியன்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் விபத்து காரணமாக பிராந்திய கடல் நீர் மாசுபட்ட போதிலும் சம்பந்தப்பட்ட சர்வதேச பிரகடனத்தில் கைச்சாத்திடாத காரணத்தினால், இலங்கை இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என அரசாங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மத்திய கிழக்கில் இருந்து இந்தியாவுக்கு 270,000 தொன் எண்ணெயை கொண்டு சென்ற நியு டயமண்ட் கப்பல், செப்டம்பர் 3ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் சங்கமன் கந்தவிலிருந்து 60 கிலோமீற்றர் தூரத்தில் தீப்பிடித்தது.

இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இந்திய கடலோர பாதுகாப்புப் மற்றும் கடற்படையுடன் இணைந்து செப்டம்பர் 11ஆம் திகதி தீயை அணைத்தன.

சர்வதேச சட்டங்களுக்கு அமைய இத்தகைய பேரழிவுகளைச் சமாளிக்க உள்ளூர் சட்டங்களை புதுப்பிக்கத் தவறியதும் இலங்கைக்கு இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது என கடல்சார் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பங்களை எதிர்கொள்வது தொடர்பிலான சர்வதேச கொள்கைகளில் கைச்சாத்திடாமை, அவ்வாறான விடயங்களை இலங்கை சட்டத்திற்குள் உள்வாங்காமை உள்ளிட்ட காரணங்களால் பல கோடிகள் இலங்கைக்கு இல்லாமல் போகுமென, கடல்சார் சட்ட நிபுணரும், இலங்கை கப்பல் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளருமான கலாநிதி டேன் மாலிக குணசேகர தெரிவித்துள்ளார்.


குறைபாடுகள் இருந்தபோதிலும்

எவ்வாறாயினும், கப்பலின் செயற“்்பாட் ட்டை நிர்வகிக்கும் உள்ளூர் சட்டங்களில் குறைபாடுகள் இருந்தபோதிலும், அதிகாரிகள் இன்னும் விழிப்புடன் இருந்திருந்தால், மீட்புச் சட்டத்தின் கீழ் கப்பலின் மதிப்பு மற்றும் அதன் சரக்குகளில் நான்கில் ஒரு பங்கை இலங்கை கோருவதற்கான வாய்ப்பு இருந்திருக்கும் என குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

கப்பலின் பணியாளர்களை மீட்பதற்கும் நாட்டின் கடல் சூழலைப் பாதுகாப்பதற்கும் தலையிடுவதன் மூலம் இலங்கை கடற்படை சட்டரீதியான மீட்புப் பங்கைக் கொண்டுள்ளது. இலங்கையின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்குள் கப்பல் விபத்தினை எதிர்நோக்கியுள்ளதால், தலையீட்டு சட்டங்களின்படி பாதுகாப்பை வழங்க இந்த நாட்டின் அதிகாரிகள் பொறுப்பானவர்கள்.

அவ்வாறு அல்லாவிடின், அந்த கொடுப்பனவு அந்த மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் நிறுவனத்திற்கு (contractual salvor) சேரும் எனவும், ஜேர்மனியின் ஹம்பர்க் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் பெற்ற மாலிக குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான நிலையில், இது இலங்கையோ இந்தியாவோ அல்ல எனவும், எம்டி நியூ டயமண்டின் கிரேக்க உரிமையாளர்களால் நியமிக்கப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த பஸ்கலிஸ் ஸ்மித் நிறுவனமே அதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தற்போதைய சூழ்நிலையில் இலங்கை செய்ய வேண்டியது சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நிறுவனத்தை தமது மேற்பார்வையில் கொண்டுவர சரியான சட்ட ஆவணங்களில் கையெழுத்திடுவதுதான்.”

இலங்கை அதிகாரிகள் அவ்வாறு செய்யத் தவறியதானது, சிங்கப்பூர் நிறுவனத்தை சுதந்திரமாக செயற்படுவதற்கு அனுமதிப்பதாகவும், குறித்த நிறுவனம் அந்த கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என அர்த்தப்படுவதாக மாலிக குணசேகர சுட்டிக்காட்டுகிறார்.

“கொடுப்பனவை பெறுவதற்கான வாய்ப்பு இப்போது இழக்கப்பட்டுவிட்டது. இப்போது நாம் செய்யக்கூடியது செயற்பாட்டு செலவைக் கோருவது மாத்திரமே”

இழப்பு குறைந்தது 750 மில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை மற்றும் இந்தியா ஆகியன கப்பல் நிறுவனத்திடமிருந்து 350 மில்லியன் ரூபாயை கோரியுள்ளதாக மாலிக குணசேகர மேலும் தெரிவித்தார்.

பணம் பெறப்பட்ட போதிலும், அது இரு நாடுகளுக்கும் இடையில் பிரிக்கப்பட உள்ளது.

சட்ட மாஅதிபர் திணைக்களம் கடந்த 16ஆம் திகதி, கப்பல் தீப்பிடித்த கடந்த 3ஆம் திகதியிலிரு்நது ஏற்பட்ட செலவுகளை மதிப்பீடு செய்து, எண்ணெய் கப்பலின் உரிமையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளிடமிருந்து 340 மில்லியன் ரூபாய் நட்டஈட்டை கோரியிருந்தது.


அதிகபட்சம் 140 இலட்சம்

கப்பலின் கெப்டன் மீது குற்றவியல் குற்றத்திற்காக வழக்குத் தொடர முடியும் என்றும், இலங்கையின் தற்போதைய சட்ட நிலைமைகளைப் பொறுத்து அவருக்கு அதிகபட்சமாக 4 முதல் 14 மில்லியன் ரூபாய் வரை மாத்திரமே அபராதம் விதிக்க முடியும் எனவும் கலாநிதி மாலிக குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

கடல் மாசு தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு சிவில் வழக்கைத் தாக்கல் செய்து, சில இழப்பீடுகளைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை எம்டி நியூ டயமண்டில் பல ஆய்வுகளை நடத்தியது, தீவிபத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பதை தீர்மானிக்க, அடுத்த வாரம் ஆய்வு குறித்த இறுதி அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக கடல் வளங்களை அழித்தல் மற்றும் மாசுபடுத்தும் அபாயத்தை கருத்தில் கொள்ளும்போது, குறித்த கப்பல் இன்னமும் இலங்கையின் அதிகார எல்லையிலேயே காணப்படுவதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

“தேவைப்படும் போது கடல் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பாடுகளைச் செயல்படுத்த இலங்கைக்கு அதிகாரம் உண்டு.”

தற்போதைய கடல் மாசு தடுப்பு சட்டம் இலங்கையின் கூற்றை மட்டுப்படுத்தவில்லை என்றாலும், அது வேறு சர்வதேச தரங்களால் அது வரையறுக்கப்பட்டுள்ளது என கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழு (MEPA) சுட்டிக்காட்டுகிறது.

“எங்களிடம் இருக்க வேண்டிய அடிப்படைகள் இல்லை, ஆறு முக்கிய மாநாடுகளை நாங்கள் அங்கீகரிக்கவில்லை” என கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழுவின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர கூறியுள்ளார்.

இலங்கையின் கடல் சூழலை மாசுபடுத்தும் எந்தவொரு வழக்கையும் விசாரணை செய்ய தற்போதைய சட்டத்தில் எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலமும், விபத்து குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்காததன் மூலமும் குற்றமிழைத்துள்ளதாக நியு டயமண்ட் கப்பலின் கெப்டன் மீது சட்டமா அதிபர், குற்றம் சாட்டியுள்ள நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே செப்டம்பர் 28ஆம் அவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கடல் மாசு தடுப்புச் சட்டத்தை மீறியதாகக் குற்றம் சாட்டி, கப்பல் தீப்பிடித்த பகுதியான கல்முனை நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்ட, கல்முனை உயர் நீதிமன்றில் கப்பலின் கெப்டனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.