வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் 19 ஆம் திகதி வரை நீடிப்பு.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 8 ஆம் திகதி மகா சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஆலயத்துக்குள் நுழைந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வழிபாட்டில் ஈடுபட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர்.
அவர்களைக் கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் விசாரணைகள் நிறைவு பெறாத காரணத்தால் இன்று வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
காலை 9 மணி முதல் மூன்று தடவைகள் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், தொல்பொருள் திணைக்களத்தினர் அங்குள்ள தொல்பொருள் சின்னங்களைச் சந்தேகநபர்கள் சேதப்படுத்தினர் என்று மன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தனர்.
இதனையடுத்து மேற்படி சந்தேகநபர்கள் 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆலயப் பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பில் ஜனாபதிதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான என்.ஸ்ரீகாந்தா, க.சுகாஷ், தி.திருஅருள், கிறிஸ்ரினா, ஜிதர்சன், சஜித்தா, சாருகேசி, விதுசினி, கீர்த்தனன், யூஜின் ஆனந்தராஜா, கொன்சியஸ் உள்ளிட்ட பலர் மன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.