மலேசியாவுக்கு காரில் செல்லும் பயணிகளுக்கு கடவுச்சீட்டுக்குப் பதிலாக ‘கியூஆர்’ குறியீடு.
சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ), சிங்கப்பூரிலிருந்து காரில் மலேசியா செல்லும் பயணிகளின் குடிநுழைவுச் சோதனையை எளிமையாக்கியிருக்கிறது.
இதனால் காத்திருக்கும் நேரம் குறையும் என எதிபார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்லும் கார் பயணிகள் கடவுச்சீட்டுக்குப் பதிலாக கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி குடிநுழைவுச் சோதனையை முடிக்கலாம். இந்தப் புதிய வசதி மார்ச் 19ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது.
தனிப்பட்ட ஒருவர் அல்லது ஒரே வாகனத்தில் பயணம் செய்யும் பத்துப் பேர் கொண்ட குழுவினர் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தலாம் என்று மார்ச் 12ஆம் தேதி ஆணையம் தெரிவித்தது.
இதற்குப் பயணிகள் முதலில் தங்களுடைய கைப்பேசியில் ‘MyICA’ என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து கடவுச்சீட்டு விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
சிங்கப்பூர்வாசிகள் ‘சிங்பாஸ்’ பயன்படுத்தினால் தானாக தங்களுடைய விவரங்களைப் பதிவு செய்யலாம். கடவுச்சீட்டில் சுயவிவரங்கள் அடங்கிய பக்கத்தின் அடியில் உள்ள இரண்டு அல்லது மூன்று வரிசையில் உள்ள எழுத்துகளை கைப்பேசி கேமரா மூலம் வருடியும் விவரங்களைப் பதிவு செய்ய முடியும்.
பயணிகள் அல்லது குழுவினர் தங்களுக்கென்று பிரத்தியேகமான கியூஆர் குறியீட்டை உருவாக்கிக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
தனிப்பட்ட ஒருவர் தனக்கென்று கியூஆர் குறியீட்டை உருவாக்க அவரது தனிப்பட்ட விவரங்கள் மட்டும் போதும். ஆனால் பத்துப் பேர் அடங்கிய குழுவுக்கு ஒவ்வொரு பயணியின் விவரங்களும் யாராவது ஒருவரது திறன்பேசி வழியாக சமர்ப்பிக்க வேண்டும்.
பத்துப் பேருடைய கடவுச்சீட்டு விவரங்களை ஒரே ஒரு கியூஆர் குறியீட்டில் உள்ளடக்கிவிடலாம். இதற்கு ‘குடும்பம்’, ‘நண்பர்கள்’ எனப் பெயரிட்டும் விண்ணப்பங்களில் குறிப்பிடலாம் என்று ஐசிஏ கூறியது.
சோதனைச் சாவடியை கடக்கும்போது முகப்புகளில் பயணிகள் தங்களுடைய கியூஆர் குடியீட்டை வருட வேண்டும். ஐசிஏ அதிகாரி ஒருவர், ஒவ்வொரு பயணியின் முகத்தைப் பார்த்து தங்களுக்குக் கிடைத்த விவரங்களுடன் சரி பார்ப்பார்.
ஒரே வாகனத்தில் குழுவாகப் பயணம் செய்பவர்களின் கியூஆர் குறியீடு வாகனத்தில் உள்ள பயணிகளின் எண்ணிக்கை அல்லது விவரங்களுடன் ஒத்துப் போகவில்லையென்றால் அவர்கள் திருப்பியனுப்பப்படுவார்கள்.
முதல் முறையாக பயணம் செய்பவர்கள் அல்லது இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட கடவுச் சீட்டுக்குப் பதிலாக வேறு கடவுச்சீட்டைப் பயன்படுத்துபவர்கள் குடிநுழைவு சோதனைக்கு கடவுச்சீட்டை காட்ட வேண்டும் என்று ஐசிஏ தெரிவித்தது.
இதற்கு அடுத்தடுத்த பயணங்களில் அவர்கள் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தலாம் என்று அது மேலும் கூறியது.
புதிய ஏற்பாடு பற்றி கருத்துரைத்த ஐசிஏ செயலாக்கப் பிரிவின் துணைக் கண்காணிப்பாளர் சியா ஜிங் யிங், “குடிநுழைவுச் சோதனைக்கு கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தினால் ஒட்டுமொத்தமாக காத்திருக்கும் நேரம் 30 விழுக்காடு வரை குறையும் என்றார்.
நான்கு பயணிகள் கொண்ட கார்களுக்கு இருபது வினாடிகளும் பத்து பயணிகள் கொண்ட வாகனங்களுக்கு ஒரு நிமிடம் வரையிலும் நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என்று ஐசிஏ மதிப்பிட்டுள்ளது.