வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 5 பேர் நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டம்!
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலயப் பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், தமக்கு நீதி கோரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஐவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 8 ஆம் திகதி மகா சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஆலயத்துக்குள் நுழைந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வழிபாட்டில் ஈடுபட்ட ஆலயப் பூசகர் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர்.
அவர்களை கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் விசாரணைகள் நிறைவு பெறாத காரணத்தால் நேற்று (12) வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நேற்று காலை 9 மணி முதல் மூன்று தடவைகள் குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் தொல்பொருள் திணைக்களத்தினர் அங்குள்ள தொல்பொருள் சின்னங்களைச் சந்தேகநபர்கள் சேதப்படுத்தினர் என்று மன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து மேற்படி 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தொடர்ந்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள இவர்களை இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் விளக்கமறியலில் உள்ளவர்களின் உறவினர்கள் பார்வையிடச் சென்றிருந்தனர். இதன்போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 8 நபர்களின் ஐவர் நேற்றுக் காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறிப்பாக நேற்றுக் காலை நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்லப்படும்போதே அவர்கள் உணவை எடுத்திருக்கவில்லை. இந்நிலையில், இன்றைய தினமும் அவர்கள் உணவை உட்கொள்வதற்கு மறுத்துள்ளனர்.
ஆலயப் பூசகர் மதிமுகராசா, திலகநாதன் கிந்துஜன், சுப்பிரமணியம் தவபாலசிங்கம், துரைராசா தமிழ்ச்செல்வன், விநாயகமூர்த்தி ஆகிய ஐந்து பேரும் நேற்றுக் காலையிலிருந்து நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.