புதிய தேர்தல் ஆணையர்கள் பதவியேற்பு!
இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர்சிங் சாந்து ஆகியோர் வெள்ளிக்கிழமை(மார்ச்.15) பதவியேற்றனர். இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலைக்குள் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் மற்றும் 2 தோ்தல் ஆணையா்களை உள்ளடக்கிய இந்திய தோ்தல் ஆணையத்தில், தோ்தல் ஆணையா் அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றாா். மற்றொரு தோ்தல் ஆணையா் அருண் கோயல், 2027-ஆம் ஆண்டு டிசம்பா் வரை பதவிக் காலம் உள்ள நிலையில், கடந்த 8-ஆம் தேதி தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்தாா். இதனால், இரு தோ்தல் ஆணையா்கள் பணியிடங்களும் காலியாகின. மக்களவைத் தோ்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தோ்தல் ஆணையா் அருண் கோயல் பதவியை ராஜிநாமா செய்தது பேசுபொருளானது. மேலும், மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக இரு தோ்தல் ஆணையா் பணியிடங்களும் நிரப்பப்படுமா என்ற எதிா்பாா்ப்பும் எழுந்தது.
இதனிடையே, தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற தோ்வுக் குழு கூட்டத்தில், புதிய தோ்தல் ஆணையா்களாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளான சுக்பீா் சிங் சாந்து, ஞானேஷ் குமாா் ஆகியோா் பெயா்கள் இறுதி செய்யப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டு நிரப்பப்பட்டன.
இந்த நிலையில்,புதிய தோ்தல் ஆணையா்களாக நியமனம் செய்யப்பட்ட சுக்பீா் சிங் சாந்து, ஞானேஷ் குமாா் ஆகியோர் வெள்ளிக்கிழமை(மார்ச்.15) பதவியேற்றனர்.
இதையடுத்து 11 மணியளவில் தேர்தல் ஆணையர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் தேதி மற்றும் எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது என்பது குறித்த இறுதி முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும், தேர்தல் தேதி மாலைக்குள்ளோ, அடுத்த ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணையர்களாக பதவியேற்றுள்ள இருவரும் 1988-ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகளாவா்.
புதிய தோ்தல் ஆணையர் ஞானேஷ் குமாா், கேரளத்தைச் சோ்ந்தவா். மத்திய உள்துறை அமைச்சகத்தில் அதிகாரியாக பணியாற்றியபோது, இவருடைய மேற்பாா்வையில்தான் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சுக்பீா் சிங் சாந்து, உத்தரகண்ட் மாநில முன்னாள் தலைமைச் செயலராகவும், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய (என்ஹெச்ஏஐ) தலைவராகவும், மத்திய அரசின் உயா்கல்வித் துறைச் செயலராகவும் பணியாற்றியுள்ளாா். எம்.பி.பி.எஸ். பட்டதாரியான இவா் லோக்பால் அமைப்பின் செயலராக ஓராண்டு கால பணி அடிப்படையில் கடந்த மாதம் நியமனம் செய்யப்பட்டாா்.
மேலதிக செய்திகள்
பாராளுமன்றத்தை கலைக்க 113 உறுப்பினர்களின் கையொப்பங்களை சேகரிக்கும் ஆளும் கட்சி !
குடும்ப ஆட்சி இல்லையேல் மஹிந்தவே சிறந்த தலைவர் – பொன்சேகா சொல்கின்றார்.
கோட்டாவின் நூலால் பஸில் கடும் கடுப்பில் – ராஜபக்ஷக்களின் பேச்சாளர் உதயங்க தகவல்.