பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இனவெறி, மதவெறி,நோயாளியா?- கஜேந்திரன் எம்.பி. கேள்வி
நெடுங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இனவெறி, மதவெறி, பாலியல் சார்ந்த மனநோய்க்கு உட்பட்டவரா என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுவிக்க வலியுறுத்தியும், பொலிஸாரின் அராஜகத்தைக் கண்டித்தும் நெடுங்கேணியில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியின் பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கைது செய்யப்பட்டவர்களின் ஒருவரின் வேட்டியை உருவி அரை நிர்வாணமாகக் கொண்டு வந்திருந்தார்கள். நெடுங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வக்கிர புத்தி கொண்டவர். ஏனெனில் ஆண் ஒருவரை அரை நிர்வாணமாகக் கொண்டு வருகின்றபோது பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸார் உள்ளார்கள். பொதுமக்கள், பெண்கள் வெளியில் நிற்கின்றார்கள். அப்படி இருக்கையில் அவர்களுக்கு முன்னே அரை நிர்வாணமாகக் கொண்டு செல்ல நெடுங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அனுமதிக்கின்றார் என்றால் அவரிடம் ஒரு மனநோய் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இனவெறி, மதவெறி, பாலியல் சார்ந்த மனநோய்க்கு உட்பட்டவரா என்ற கேள்வி எழுகின்றது. மிருகக் குண்ம் கொண்ட ஒருவரால் கைது செய்யப்ப்ட்ட 8 பேரும் மறுநாள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர்தான் குற்றச்சாட்டுக்களைத் தேடிப் பிடித்தார்கள்.
தொல்பொருள் சின்னம் எவற்றுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. பொய்யான அடிப்படையில் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளரிடம் அறிக்கை பெற்று அவர்களைது பிணையை நிறுத்தியுள்ளார்கள். வெடுக்குநாறிமலையை சைவர்களிடம் இருந்து பறித்து எடுப்பதற்கான முயற்சியே நடைபெறுகின்றது.
தொல்பொருள் அமைச்சரும் இதன் சூத்திரதாரியாக இருந்து செயற்படுகின்றார். அவர் இனவெறிச் செயற்பாட்டைக் கடந்த காலங்களில் மேற்கொண்டவர். குருந்தூர்மலையில் அகழ்வு செய்யப் போகின்றோம் எனப் பொய் சொல்லி அங்கு பௌத்த விகாரையை நிறுவியவர். அதற்கு முழு சூத்திரதாரி விதுர விக்கிரமநாயக்க என்ற தொல்பொருள் அமைச்சர். அதே அமைச்சர்தான் தற்போது இங்கே வன்முறைகளுக்குக் காரணமாக இருக்கின்றார். தமிழ் – சிங்கள கலவரத்தை ஏற்படுத்த முயல்கின்றார். இந்த இனவெறிக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
நான்காவது நாளாகக் கைது செய்யப்பட்ட 8 பேரில் 5 பேர் உண்ணாவிரதம் இருக்கின்றார்கள். அவர்களது உடல் நிலை பாதிப்படைகின்றது. வவுனியாவில் உள்ள மனித உரிமை ஆணைக்குழு அதிகாரி இனவெறி பிடித்தவராக இருக்கின்றார். மனித உரிமை ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தியும் இதுவரை கைதிகளைப் பார்வையிடவில்லை. குடும்பத்தினரைச் சந்திக்கவில்லை. அவர்களும் இந்த ஒடுக்குமுறைக்குத் துணைபோகின்றார்கள். வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அதிகாரி பதவி விலக வேண்டும். அதன் கொழும்பு அலுவலகம் போரினவாத நிகழ்ச்சி நிரலில் இயங்குகின்றதா? என்ற கேள்வியும் எழுகின்றது.
நாளை தினம் காலை 10 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலயத்தின் முன் நடைபெறும் போராட்டத்திலும் அனைவரும் கலந்துகொண்டு அவர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.” – என்றார்.