வெடுக்குநாறிமலை விவகாரம்: ஜனாதிபதியைச் சந்திக்க தமிழ்க் கட்சிகள் தீர்மானம்
வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டுள்ள 8 தமிழர்களும் பிணையில் செல்ல முடியாதவாறு, தொல்லியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாகச் சந்தித்து, வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்ட 8 தமிழர்களையும் உடனடியாகப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பது என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் கூடித் தீர்மானித்துள்ளன.
யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று இந்தச் சந்திப்பு நடந்தது.
விக்னேஸ்வரன் எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி., ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டுள்ள 8 தமிழர்களும் பிணையில் செல்ல முடியாதவாறு, தொல்லியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்பான அடுத்த வழக்கு தவணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமையாகும். அதற்கு முன்னதாக ஜனாதிபதி ரணிலைச் சந்தித்து, கைதான தமிழர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் மீதான குற்றப் பத்திரத்தில் மாற்றம் செய்து, உடனடியாகப் பிணை வழங்கும் ஏற்பாடுகளைச் செய்ய வலியுறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அடுத்த கட்டமாக வெடுக்குநாறிமலை விவகாரத்தில் நிரந்தரமான தீர்வைக் காண, ஜனாதிபதியுடன் அடுத்த கட்டமாக பேசவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.